கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினராக இருந்தவர் வி.எஸ். பாபு. கடந்த செப்டம்பர் 9-ம் தேதி திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறு காரணமாக சென்னையில் உள்ள அமைந்தகரை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
சுமார் 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ். பாபு, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் தமிழக அரசியலில் முக்கியக் கவனம் பெற்றார். குறிப்பாக, ஸ்டாலினின் சொந்தத் தொகுதியிலேயே அவரை தோற்கடித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது.
இதற்கிடையே, வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகாததால், கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
சட்டப்படி வெளியிட அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிடவும், தொகுதி மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தடையின்றி கவனிக்கப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வி.எஸ். பாபு சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
தற்போது அவரது மறைவு தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாபுவை புகழ்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா :
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வி.எஸ். பாபுவைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் உழைத்தவர் என குறிப்பிட்டு, அவரது மறைவு கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்ற வகையில் புகழாரம் சூட்டியுள்ளார்...
==================