Tamil Nadu By Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் ஐக்கியமாகினர்.
தமிழகத்தில் 7 தொகுதிகள் காலி
மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் மற்றும் முதல்வர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய 7 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.
இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தனித் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தவெக, அதிமுக, திமுக போட்டி
வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், திமுக, தவெக, அதிமுக போட்டியிடுகின்றன. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்து விட்டது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா ஆகியோர் களம் காண்கிறார்கள்.
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்த நிலையில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா
அதன்படி முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில்...
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாக தவெக துணைப் பொதுச் செயலாளர் மரகதம் குமரவேல், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுவார்கள்” என கூறப்பட்டுள்ளது.
வெற்றிக்கு பாடுபட விஜய் வேண்டுகோள்
இவர்கள் இருவருக்கும் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றவர்கள்
அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.
வெற்றி நிலவரம்
அந்த தேர்தலில் மரகதம் குமரவேல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் எழில்மலையை விட சுமார் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்றிருந்தார்.
தாராபுரத்தில் போட்டியிட்ட சத்தியபாமா திமுக வேட்பாளர் இந்திராணியை விட சுமார் 16,727 வாக்குகள் அதிகம் பெற்றார். தவெக வேட்பாளர் கௌரி சித்ராவை விட 34662 அதிகம் பெற்றிருந்தார். சத்யபாமாவுக்கு மட்டும் 81,100 வாக்குகள் கிடைத்திருந்தது.
அதிமுக வேட்பாளர்கள் யார்?
அதிமுக வேட்பாளர்களும் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படுவார்கள். எனவே, இரண்டு தொகுதிகளிலும் கடும் போட்டி உருவாகி இருக்கிறது.
======================