TVK leader Vijay claimed the right to form government, but Governor has not yet invited him google
தமிழ்நாடு

”ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநர்” : விஜய் பதவியேற்பு தள்ளிவைப்பு : மக்கள் பவன் செல்லும் TVK எம்எல்ஏக்கள்! அடுத்து என்ன?

ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் உரிமை கோரிய நிலையில், ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்காததால், தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

Kannan

108 தொகுதிகளில் தவெக வெற்றி

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகிறது.

தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு

திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்கள் ஆதரவை தவெகவிற்கு வழங்கி இருக்கிறது. அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், இடதுசாரிகள், விசிக ஆதரவை தவெக கேட்டுள்ளது.

ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்

தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் செயலர் கிர்லோஷ் குமாரை, நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் வழங்கப்படவில்லை.

ஆதரவு கடிதம் கேட்கும் ஆளுநர்

தவெக.வுக்கு ஆதரவு அளிக்கும் 118 எம்எல்ஏக்கள் அடங்கிய பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் கையொப்பம் அடங்கிய கடிதத்தை முழுமையாகச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தப் பட்டியலை ஆய்வு செய்த பிறகே, முறைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

பதவியேற்பு விழா தள்ளிவைப்பு

இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த பதவியேற்பு விழா தள்ளிப் போகிறது. அநேகமாக சனிக்கிழமை பதவியேற்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.

ஆளுநரை சந்திக்கும் தவெக எம்எல்ஏக்கள்

இந்தநிலையில், வெற்றிபெற்ற தவெக எம்எல்ஏக்கள் 108 பேரும் இன்று ஆளுநரை சந்திக்கின்றனர். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதமும் அப்போது அவரிடம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

விரைவில் பதவியேற்பு விழா

பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆளுநரின் அழைப்பு எப்போது வரும்? அடுத்தகட்டமாகப் பதவியேற்பு விழா எந்தத் தேதியில் அமையும் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று தவெக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

===============