TVK leader Vijay selected 50 candidates for assembly elections, list of candidates will be released soon google
தமிழ்நாடு

TVK Vijay : ”50 வேட்பாளர்களை டிக் செய்த விஜய்” : விரைவில் பட்டியல் : பெரம்பூரில் விஜய் போட்டி! எகிறும் எதிர்பார்ப்பு...

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 50 வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் தேர்வு செய்து இருப்பதாகவும், விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Kannan

தமிழக தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது. எனவே, அனைத்து கட்சிகளும் தீவிரமான தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளன.

தொகுதி பங்கீடு தீவிரம்

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி இன்று திருச்சி வந்து சென்ற பிறகு, அதிமுக கூட்டணியை தொகுதிகளை இறுதி செய்யும் எனத் தெரிகிறது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி, களப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம்

முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கட்சியின் தலைவரான விஜய் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இருந்து வருகிறார்.

வேட்பாளர்கள் நேர்காணல்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் நேற்று நேர்காணல் நடத்தினார். சுமார் 50 பேரை விஜய் நேர்காணல் செய்துள்ளதாகவும், அனைவரும் வேட்பாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெண்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பு

இந்த வேட்பாளர் பட்டியலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும், படித்தவர்களும், பெண்களுக்கும் அதிகம் இருப்பார்கள் என்று தெரிகிறது.

விஜய் ஒவ்வொரு வேட்பாளர்களுடன் தனித்தனியாக பேசி வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

நேர்காணலுக்கு வந்த அனைவரும் வேட்பாளர்கள் தான் என்றும், அதனை உறுதி செய்யவே நேரில் அழைக்கப்பட்டதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சரமாரிக் கேள்வி?

நேர்காணல் பங்கேற்ற வந்தவர்களிடம் விஜய் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். உங்கள் தொகுதியில் பூத் கமிட்டி சரியாக செயல்படுகிறதா? எத்தனை பேரை நியமித்துள்ளீர்கள்? உங்கள் பகுதியில் கள நிலவரம் எப்படி உள்ளது? என்று விசாரித்துள்ளார்.

தைரியமா வேலை செய்யுங்க!

"சினிமா உள்ளிட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு தான் முழு நேர அரசியலுக்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் தவிர இப்போது வேறு எதுவும் கிடையாது. நாம் அரசியலுக்கு வந்த பிறகு நமக்கு என்னென்ன தொந்தரவு வரும், அடுத்து என்ன நடக்கும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எனவே எதற்கும் அஞ்சாமல் துணிந்து களத்தில் இறங்கி வேலை செய்யுங்கள்" என்று வேட்பாளர்களுக்கு விஜய் அட்வைஸ் தந்து இருக்கிறார்.

விரைவில் வேட்பாளர் பட்டியல்

முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், செங்கோட்டையன் போன்றவர்களின் பெயர்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதன் அடிப்படையில், விரைவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பெரம்பூரில் விஜய் போட்டி?

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தத் தொகுதியில் மட்டும் வேட்பாளர் யாரும் நேர்காணலில் பங்கேற்கவில்லை.

பெரம்பூர் தொகுதிக்கு நானே வருவேன் என்று விஜய் சூசகமாக தெரிவித்ததாக, நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர். பெரம்பூரில் விஜய் போட்டியிட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் விஜய் பிரசாரம் செய்ய வேண்டி இருக்கிறது. தான் போட்டியிடும் தொகுதி சென்னையில் இருந்தால், காலையில் அங்கு பிரசாரம் செய்து விட்டு, பின்னர் தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம் என்று விஜய் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

எனவே, சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் தான் விஜய் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

====================

.