TVK Leader Vijay to Offer Prayers Tomorrow at Velankanni and Nagore Dargah! source:google
தமிழ்நாடு

வேளாங்கண்ணி தேவாலயம், நாகூர் தர்கா : தவெக தலைவர் விஜய் நாளை வழிபாடு!

மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் நாகூர் தர்காவிற்கும் சென்று அங்குள்ள சிறப்புத் தொழுகையில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

Kavitha prasanna

தவெக தலைவர் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிர ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

தனது கட்சியின் வெற்றி மற்றும் எதிர்கால அரசியல் பயணம் எவ்விதத் தடைகளுமின்றி அமைய வேண்டியும் அவர் பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வருவதாகக் கூறப்படுகிறது.

மதம் கடந்த ஆன்மீகப் பயணம்

விஜய் ஏற்கனவே கடந்த 28-ம் தேதி அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். அங்கு அவருக்குக் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையும், வேலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஷீரடியில் விஜய் தரிசனம்

அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்குத் தனி விமானம் மூலம் சென்று தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பினார்.

அன்னை வேளாங்கண்ணி ஆலயம் , நாகூரில் விஜய்?

இதன் தொடர்ச்சியாக, நாளை (மே 2) அதிகாலை 5 மணி அளவில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனையில் அவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு தொழுகையில் கலந்துகொள்ள திட்டம்

வேளாங்கண்ணியில் வழிபாட்டை முடித்துக்கொண்டு, மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் நாகூர் தர்காவிற்கும் சென்று அங்குள்ள சிறப்புத் தொழுகையில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை

ஆன்மீகப் பயணங்களுக்கு இடையே, சென்னை பனையூரில் உள்ள தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை விஜய் நடத்தினார்.

வெற்றி பெற்ற அனைவரும் பனையூர் அலுவலகம் வர அறிவுறுத்தல்

இக்கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் அனைவரும் உடனடியாக பனையூர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும், அவர்களுக்காகத் தான் காத்திருப்பேன் என்றும் உற்சாகமாகத் தெரிவித்தார்.

அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம்

தமிழக அரசியலில் விஜய்யின் வருகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், அவரது இந்த நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

=====