TVK Minister Ramesh Speaks on Madurai Meenakshi Amman Temple Kumbhabhishekam source:thamizhalai,google
தமிழ்நாடு

“கடந்த கால ஆட்சியாளர்களின் விமர்சனங்களை முறியடித்து குடமுழுக்கை சிறப்பாக நடத்தியுள்ளோம்”: அமைச்சர் ரமேஷ்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை விமர்சனங்களைக் கடந்து சிறப்பாக நடத்தியதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி.

Kavitha prasanna

TVK Minister Ramesh Speaks on Madurai Meenakshi Amman Temple Kumbhabhishekam

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கோயிலுக்கு எதிரிலுள்ள புதுமண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் சட்டம், எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்தியுள்ளோம்

அப்போது அமைச்சர் ரமேஷ் பேசுகையில், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி நிர்வாகம் குறித்து என்ன தெரியும் என்ற கடந்த கால ஆட்சியாளர்களின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் முதல்வர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளதாகத் தெரிவித்தார்.

விழா ஏற்பாடுகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள்

குடமுழுக்கு விழாவிற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, வீரவசந்தராயர் மண்டபப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.

நடுநிலையோடு அனுமதி சீட்டுகள்

மேலும் மேல்தளத்தில் 9,500 நபர்கள் மட்டுமே அமர முடியும் என்பதால், அதற்கு ஏற்பவே அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இதில் 2,000 பொதுமக்களுக்கும், ரூ.25 கோடி வரை உபயம் அளித்தவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நடுநிலையோடு அனுமதி சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன என்றார்.

பக்தர்களுக்கான வசதிகள்

தீர்த்தம் தெளிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட்ட பொது தரிசனம், பக்தர்களின் வசதிக்காகக் காலை 8.30 மணிக்கே தொடங்கப்பட்டது. மேலும், இரண்டரை லட்சம் பேருக்குக் குடிநீர் மற்றும் பிஸ்கட் அடங்கிய பைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.

செல்போன் தடை

தொடர்ந்து பேசிய அவர், கோயிலுக்குள் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. விதிகளை மீறி வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செல்போன் வைப்பகக் கட்டணம்

செல்போன் வைப்பகங்களுக்குக் கட்டாயமாக ரூ.5 வசூலிக்கத் தேவையில்லை என்றும், கோயில் நிதிநிலையைப் பொறுத்து விலக்கு அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதால் பல கோயில்களில் இக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயில் யானைகள்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசு நேரடியாக யானைகளை வாங்காமல் உபயதாரர்கள் மூலமாகவே கோயில்களுக்கு யானைகள் பெறப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

பிரசாத விற்பனை

மேலும் இதுகுறித்து பேசிய அவர், பிரசாதங்களின் விலைகள் உயர்த்தப்படவில்லை. 12 முக்கியக் கோயில்களில் தனியார் வசமிருந்த பிரசாத விற்பனையைத் துறை நேரடியாகக் கைப்பற்றி, கூடுதல் கட்டணமின்றி தரமாக வழங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.

======