பேரவைத் தலைவர் நாற்காலி
தமிழக சட்டமன்றத்திற்கு இதுவரை பெண் யாரும் சபாநாயகராக பொறுப்பு வகித்தது கிடையாது. துணை சபாநாயகராகவும் பெண்கள் யாரும் இருந்தது கிடையாது. எனவே, பாரம்பரியம் மிக்க சபாநாயகர் இருக்கையை ஒரு பெண் அலங்கரிக்கவில்லை என்பது குறையாகவே இருந்து வந்தது. ஆனால், இதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
சபாநாயகர் இருக்கையில் முதல் பெண்
பேரவைத் தலைவர் நாற்காலியில் முதல்முறை ஒரு பெண் அமர்ந்தார். அவர் திருப்பூர் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ சத்யபாமா ஆகும்.
தங்கம் தென்னரசு பாராட்டு
இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூட்டத்தொடரில் பேசும் போது, மாண்புமிகு பேரவை மாற்று தலைவர் அவர்களே, லேடி வெல்லிங்டன் அவர்கள் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி பேரவைத் தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடத்திலும் இருக்கும் எதிர்பார்ப்பு.
உறுப்பினர்கள் மகிழ்ச்சி
இன்றைக்கு மாற்றுத் தலைவராக நீங்கள் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது உள்ளபடியே பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
நன்றி தெரிவித்த சத்யபாமா
உடனே, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார் சத்யபாமா. பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் வந்ததும் தனது இருக்கையில் இருந்து எழுந்து அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டு சத்யபாமா சென்றார்.
ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்
தனது இருக்கையில் அமர்ந்த பின்னர் பேசிய பேரவைத் தலைவர், மாற்று பேரவை தலைவராக செயல்பட்ட சகோதரி அவர்கள் அவையை மிக சிறப்பாக நடத்தி கொண்டிருந்தார். நான் பார்த்து கொண்டிருந்தேன். அவருக்கு எனது வாழ்த்துகள்.
அவ்வப்போது தற்காலிக பொறுப்பில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளை வழங்குவதன் மூலமாக பலருக்கு தங்களை தகுதி படைத்து கொள்ளவும், மற்ற உறுப்பினர்களின் பாராட்டுகளை பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.
அதன் அடிப்படையில் தான் சத்யபாமா அவர்களுக்கு வாய்ப்பு அளித்தேன். மிக சிறப்பாக நடத்தினார்கள் என்று தெரிவித்தார்.
அவையை நடத்தும் சபாநாயகர்
தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரை அவை நடவடிக்கைகளை வழிநடத்த பேரவைத் தலைவர் இருப்பார். நடப்பு 17வது சட்டப்பேரவையில் ஜே.சி.டி.பிரபாகர் அந்த பொறுப்பை வகிக்கிறார்.
துணை சபாநாயகர்
இவர் வேறு வேலை தொடர்பாக வெளியில் செல்லும் போது பேரவைத் துணைத் தலைவர் கவனிப்பார். அந்த பொறுப்பை துறையூர் எம்.எல்.ஏ ரவிசங்கர் ஏற்று செயல்பட்டு வருகிறார்.
மாற்று பேரவைத் தலைவர்கள்
இவரும் இல்லாத சூழலில் மாற்று பேரவைத் தலைவர்கள் கவனிப்பர். இந்த சட்டப்பேரவையில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 விஜய் சரவணன் தவெக
2 சத்யபாமா தவெக
3 மதார் பதுருதீன் தவெக
4 காதர் பாட்சா முத்துராமலிங்கம் திமுக
5 தளவாய் சுந்தரம் அதிமுக
6 தாரகை கத்பர்ட் காங்கிரஸ்
மாற்று பேரவைத் தலைவர்கள் - 2 பெண்கள்
இவர்களில் 2 பேர் பெண்கள் என்பது கவனிக்கத்தக்கது. பேரவைத் தலைவர், பேரவை துணைத் தலைவர் இல்லாத சமயங்களில் மேற்குறிப்பிட்ட 6 பேரில் யாராவது ஒருவர் அவை நடவடிக்கைகளை கவனிப்பார்.
============