TVK poised for victory in Maduranthakam source:google
தமிழ்நாடு

மதுராந்தகத்தில் தவெக வெற்றி முகம் : 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னணி!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 6-வது சுற்றில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

Kavitha prasanna

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஆத்தூர் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட முதற்கட்ட சுற்று முதலே, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து கோலோச்சி பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

6-வது சுற்று முடிவில் முன்னணி நிலவரம்

மொத்தமுள்ள 21 சுற்றுகளில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 6 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், தனது அருகாமையிலுள்ள திமுக வேட்பாளரை விட சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளார்.

முன்னணி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் (6-வது சுற்று முடிவில்)

மரகதம் குமரவேல் (தவெக): 23,980 வாக்குகள்

பரந்தாமன் (திமுக): 15,751 வாக்குகள்

கணிதா சம்பத் (அதிமுக): 14,111 வாக்குகள்

9வது சுற்றில் 11,510 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.

பரந்தாமன் 22842, கணிதா சம்பத் 19566, ஜானகிராமன் 1050,சுகந்தி 885 வாக்குகள் பெற்றுள்ளனர்.

வாக்குப்பதிவு பின்னணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இத்தொகுதியில் தவெக, திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஜானகி ராமன் உட்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையமான ஆத்தூரில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

9வது சுற்றின் போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக அதிமுக முகவர்கள் புகார். மேலும் 11 வது சுற்றின் போது வாக்குச்சாவடி இயந்திரங்கள் பலவற்றில் ’சீல்’ இல்லை என திமுக மற்றும் அதிமுக புகார்.

7 வது சுற்றில் 27460 வாக்குகளுடன் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் உள்ளார். பரந்தாமன் (திமுக) 18668 வாக்குகளும் அதிமுகவின் கணிதா சம்பத் 16201 வாக்குகள் பெற்றும் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் நீடிக்கின்றனர்.

பகல் 1 மணி கள நிலவரப்படி மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 12000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தவெக முகவர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டம்

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய தொடக்கச் சுற்று முதலே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து 12,000 வாக்குகள் வரை தாராள வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

ஆளும் தரப்பான தவெக, முக்கிய எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி வெற்றியை நோக்கி முன்னேறி வருவதால், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் திரண்டு வெற்றி முழக்கமிட்டு வருகின்றனர்.

==========