TVK Vijay requested permission to hold roadshow and campaign in Puducherry on December 5th 
தமிழ்நாடு

புதுச்சேரியில் டிசம்பர் 5ல் Roadshow : அனுமதி கோரினார் தவெக விஜய்

புதுச்சேரியில் டிசம்பர் 5ம் தேதி ரோடு ஷோ, மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய தவெக தலைவர் விஜய் அனுமதி கோரியுள்ளார்.

Kannan

தவெக விஜய் பிரசாரம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, பொதுக்கூட்டங்களில் பங்கேற்காமல் அமைதி காத்து வந்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.

சேலம் பிரசாரம் - அனுமதி மறுப்பு

ஆனால், ரோடு ஷோக்கள் நடத்தவும், மக்களிடையே பிரசாரம் செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. டிசம்பர் 5ம் தேதி சேலத்தில் நடிகர் விஜய் பிரசாரம் செய்ய பாதுகாப்பு கோரி, தவெக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் மாநகர காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. திருவண்ணாமலை தீபத்திற்கு காவலர்கள் செல்வதால், டிசம்பர் 5ம் தேதி பாதுகாப்பு வழங்க இயலாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

புதுச்சேரி டிச.5ல் பிரசாரம்

இந்தநிலையில், புதுச்சேரியில் அன்றைய தினம் பரப்புரை மேற்கொள்ள விஜய் முடிவு செய்து இருக்கிறார். கட்சி தொடங்கிய பிறகு, புதுச்சேரிக்கு முதன்முறையாக அவர் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 5ம் தேதி ரோடு ஷோ மற்றும் பிரசாரம் செய்ய அனுமதி கோரி அக்கட்சி தரப்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

காலை முதல் மாலை வரை ரோடு ஷோ

இது தொடர்பாக தவெக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், டிசம்பர் 5ஆம் தேதி காலை 9 மணிக்கு காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக மாலை 5 மணி வரை ரோடுஷோ செல்ல பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே பிரசாரம்

உப்பளம், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் விஜய் உரையாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போன்று, புதுச்சேரியில் ரோடுஷோ பிரசாரங்களுக்கு இதுவரை எந்தக் கட்டுப்பாடு கிடையாது.

அனுமதி கிடைக்க வாய்ப்பு

எனவே, விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என்று தெரிகிறது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

===================