விஜய் வீடியோ வெளியீடு
TVK Vijay Video Released on SIR Form Fill UP : எஸ்ஐஆர்- ஐ எதிர்ப்பதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், எஸ்ஐஆர் குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எல்லாருக்கும் வணக்கம், இந்திய அரசியல் சாசனம் நம் தமிழகத்தில் உள்ள எல்லாருக்கும் கொடுத்திருக்கும் உரிமைகளில் மிகவும் முக்கியமானது வாக்குரிமைதான்.ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு அடையாளமும் அதுதான். அதனால்தான் வாக்குரிமை என்பது நமது உரிமை மட்டும் அல்ல, வாழ்வும்தான். ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் நான் சொல்ல போகிறேன்.
ஓட்டு போடும் உரிமை இல்லாத ஒரு நிலை வந்தாலும் வரலாம்
எஸ்ஐஆர் பணிகள் குறித்து கேள்விப்பட்டதும் எனது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் இருக்கும் யாருக்கும் வாக்குரிமையே இல்லை என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நான், நீங்கள் உள்பட யாருக்குமே ஓட்டு போடும் உரிமை இல்லை.
நான் உங்களை பயமுறுத்துவதாக நினைக்காதீர்கள். இதுதான் நிஜமும் கூட! கொஞ்சம் ஏமாந்தால் நம்மை போல் லட்சக்கணக்கான பேருக்கும் இதே நிலைமைதான். ஓட்டு போடும் உரிமை இல்லாத ஒரு நிலை வந்தாலும் வரலாம். இதற்கு முக்கிய காரணம் அந்த எஸ்ஐஆர் (Special Intensive Revision- சிறப்பு தீவிர திருத்தம்.
இந்த எஸ்ஐஆர் நம் தமிழகத்தில் எப்படி செயல்பட போகிறது? கடந்த ஜனவரி மாதம் எடுத்த கணக்கெடுப்பில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் நம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நாம் வாக்களார்களா என்பது உறுதி செய்ய முடியாது
மேலும், Booth Level Officer (BLO- வாக்குச்சாவடி நிலைய அலுவலர்) தான் வீடு வீடாக போய் எஸ்ஐஆர் படிவத்தை கொடுப்பார்கள். அதை நாம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் சரிபார்த்து விட்டு சரியாக இருக்கும் பட்சத்தில் வாக்காளர் பட்டியலில் அந்த பெயரை வெளியிடுவார்கள். வாக்காளர் பட்டியலில் நம் பெயர் இருந்தால்தான் ஓட்டு போட முடியும். அந்த புதிய திருத்த பட்டியல் வரும் வரை நாம் வாக்காளர்களா என்பது உறுதி செய்யவே முடியாது.
அதிகாரிகளிடம் Acknowledgement வாங்கிக்கோங்க
ஒரு வேளை புது பட்டியலில் நம் பெயர் இல்லாவிட்டால் அதற்கு தனி படிவம் கொடுப்பார்கள். இது போல் எஸ்ஐஆரில் நிறைய சிரமங்கள், குழப்பங்கள் இருக்கிறது. மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் இருக்கும். உங்கள் வீடு தேடி வரும் பிஎல்ஓ அதிகாரிகளிடம் Acknowledgement வாங்கிக்கோங்க. நான் சொல்வது ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்போருக்கு என்று கூறினார்.
ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
இதைத்தொடர்ந்து முதல் முறை வாக்காளர்கள் குறித்து பேசிய அவர், அவர்களுக்கு படிவம் - 6 இருக்கு. அதை நிரப்பி உங்கள் பகுதியில் இருக்கும் அலுவலரிடம் கொடுக்க வேண்டும். ஆன்லைனில் நீங்கள் சமர்ப்பித்தால் அதற்கான ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். போனில் மெசேஜ் வரும் அதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வசிப்போரும் எஸ்ஐஆர் படிவத்தை நிரப்பி, சமர்ப்பிக்கலாம். உங்களின் பிஎல்ஓ அதிகாரியின் பெயரை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
6.36 கோடி வாக்காளர்களுக்கும் இந்த படிவம் எப்படி 1 மாதத்தில் கைகளுக்கு போகும்
தேர்தல் ஆணைய இணையதளத்தில் போனால் அந்த அதிகாரியின் போன் நம்பரும் இருக்கும். அதை எடுத்து வைத்து, உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்டுக் கொள்ளலாம். படிவம் ஏதாவது கிடைக்காவிட்டால் கேட்கலாம். இதெல்லாம் சரியாக செய்தாலும் எஸ்ஐஆர் மேல் சந்தேகம் இருக்கிறது. அதாவது 6.36 கோடி வாக்காளர்களை ஒருவர் விடாமல் இந்த மாதத்திற்குள் எப்படி அந்த படிவம் போகும்?
ஏழைகள், உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்
அதிகாரிகள் வரும் போது வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றிருந்தால் என்ன செய்வது. இவர்கள் வருவார்கள் என்பதற்காக நாம் வேலையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருக்க வேண்டுமா? இதனால் ஏழைகள், உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
நியாயமான எஸ்ஐஆர் என்றால் என்ன இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, போலி வாக்காளர்கள் இருந்தால் அவர்களையும் நீக்க வேண்டும். ஏற்கனவே வாக்குரிமை இருப்போருக்கு எதற்காக பதிவு என்ற பெயரில் இத்தனை குழப்பம்? 2021, 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வாக்களித்தவர்கள் கூட பதிவு செய்ய வேண்டும் என்றால் எதற்காக இந்த குழப்பம்.
வரும் தேர்தலில் நாம் யார் என காட்ட வேண்டும்
முக்கியமாக தவெக நிர்வாகிகளுக்கு அந்த படிவம் கிடைப்பதில்லை என்கிறார்கள். இதை யார் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை. உங்களுக்கு படிவம் கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்கு சென்று அந்த எஸ்ஐஆர் பார்மை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் படிவம் 6-ஐ வாங்கி அதை நிரப்பி கொடுங்கள்.
\வரும் சட்டசபை தேர்தலில் நீங்கள்தான் முக்கியமான படை. அதனால் உங்கள் பெயரை அதில் சேர்க்காமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வார்கள். வரும் தேர்தலில் நாம் யார் என காட்ட வேண்டும், நமது பலம் என்னவென காட்ட வேண்டும். அதற்காக பலமான பவர்ஃபுல் ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும். அந்த ஆயுதம் வேறு எதுவும் இல்லை- ஓட்டு, வாக்கு, ஜனநாயகம். அது இருந்தால்தான் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.
ஜென் Z படையினரே உஷாரா இருங்க
தமிழகமே வாக்குச் சாவடிக்கு முன்னாடி திரண்டு நிற்க வேண்டும். அதை பார்த்துவிட்டு தமிழ்நாடே தமிழக வெற்றிக் கழகமா, இல்லை தமிழக வெற்றிக் கழகம்தான் தமிழ்நாடா என்பது போல் இருக்க வேண்டும். ஓட்டு என ஒன்று இருந்தால்தான் இந்த நாட்டையே காப்பாற்ற முடியும். ஆன்லைனில் எஸ்ஐஆர் பதிவு செய்வோர் வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் உங்கள் பெயரின் ஸ்பெல்லிங்கும், ஆதாரில் இருக்கும் ஸ்பெல்லிங்கும் ஒரே மாதிரி இருந்தால்தான் அந்த படிவம் ஏற்கப்படும். அதையும் செக் செய்யுங்கள். தவெக தோழர்களே, ஜென் Z படையினரே உஷாரா இருங்க! வெற்றி நிச்சயம்! என்று அவர் கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைராலகி வருகிறது.