TVK wins in Maduranthakam and Dharapuram constituencies. source:google
தமிழ்நாடு

மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளையும் தட்டித்தூக்கிய முதல்வர் விஜய் : திமுக, அதிமுகவை வீழ்த்தி அபார வெற்றி!

மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளில் தவெக கடந்து வந்த பாதை .

Kavitha prasanna

TVK wins in Maduranthakam and Dharapuram constituencies.

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவிய மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்து அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் இரண்டு தொகுதிகளையும் தட்டித்தூக்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

1. தாராபுரம் தொகுதி தேர்தல் முடிவுகள்

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தவெக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது.

3 மற்றும் 4-ஆம் சுற்றுகளில் அதிமுக முன்னிலை வகித்தபோதிலும், 5-ஆம் சுற்றிலிருந்து தவெக வேட்பாளர் சத்யபாமா மீண்டும் முன்னிலை பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார்.

இறுதி வாக்கு விவரங்கள் (தாராபுரம்):

சத்யபாமா (தவெக): 62,596 வாக்குகள் — வெற்றி

சுகன்யா (திமுக): 52,400 வாக்குகள் (இரண்டாமிடம்)

பானுமதி (அதிமுக): 41,078 வாக்குகள் (மூன்றாமிடம்)

கார்த்திகா (நாம் தமிழர்): 4,954 வாக்குகள்

லட்சுமணன் (இந்திய கம்யூ.): 1,099 வாக்குகள்

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா, திமுக வேட்பாளரை விட 10,196 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

2. மதுராந்தகம் (தனி) தொகுதி தேர்தல் முடிவுகள்

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் தொகுதியில் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

இறுதி வாக்கு விவரங்கள் (மதுராந்தகம்):

மரகதம் குமரவேல் (தவெக): 61,470 வாக்குகள் — வெற்றி

பரந்தாமன் (திமுக): 43,916 வாக்குகள் (இரண்டாமிடம்)

கணிதா சம்பத் (அதிமுக): 38,770 வாக்குகள் (மூன்றாமிடம்)

ஜானகிராமன் (நாம் தமிழர்): 1,703 வாக்குகள்

சுகந்தி (இந்திய கம்யூ.): 1,441 வாக்குகள்

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளரை விட 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

தவெக தொண்டர்கள் கொண்டாட்டம்

கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை விட இந்த இடைத்தேர்தலில் தவெக இரு தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை உயர்த்தி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இரண்டு தொகுதிகளையும் தவெக கைப்பற்றியதை அடுத்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது வெற்றியை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

இரண்டு தொகுதிகளில் தவெக கடந்து வந்த பாதை

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இவ்விரண்டு தொகுதிகளும் அதிமுகவின் எஃகு கோட்டை என்றே அழைப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்விரு தொகுதிகளிலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களான சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல் இருவரும் வெற்றி பெற்றிருந்தனர்.

எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்த வேட்பாளர்கள்

எனினும் இவ்விருவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் முதல்வர் விஜய் முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதன் காரணமாக இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தவெகவின் வேட்பாளர்களாக....

தவெக சார்பில் மீண்டும் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் தாராபுரத்தில் சத்யபாமாவை வேட்பாளர்களாக முதல்வர் விஜய் அறிவித்தார். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

எதிர்க்கட்சியினரின் பிரச்சாரம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது திணிக்கப்பட்ட தேர்தல் என்றும் குதிரை பேரத்தால் ஏற்பட்ட தேர்தல் என்றும் பிரச்சாரம் செய்தார். எதிர்க்கட்சியினரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தே பிரச்சாரம் செய்தனர்.

தவெகவினரின் மலையளவு நம்பிக்கை

இவ்விரு தொகுதிகளிலும் வேட்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு இருப்பதாகவும் சமுக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின. எனினும் முதல்வர் விஜய்யின் பிரச்சாரம் இவை அனைத்தையும் மாற்றி விடும் என தவெகவினர் பலத்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

சர்ச்சையான சத்யபாமா வீடியோ

தாராபுரத்தில் முதல்வர் விஜய் சத்யபாமா அழுகை முதலானவை ப்ளான் என்றும் எதிர்க்கட்சியினர் கூறிவந்தனர். இதற்கும் மேலாக இடைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு முதல் நாள் சத்யபாமாவின் வீடியோ ஒன்று வெளியாகி தவெகவிற்கு சத்திய சோதனையாகவே இருந்தது எனக் கூறலாம்.

மேஜிக் எண்ணைப் பெற்ற தவெக

எனினும் இத்தனை தடைக்கற்களையும் தகர்த்து தவெக இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று 107 எனும் தங்களது மேஜிக் எண்ணை தற்போது 109 ஆக மாற்றி வரலாறு படைத்துள்ளது.

============