திராவிட கட்சிகளை வீழ்த்திய தவெக
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகும், விஜயின் தமிழக வெற்றிக் கழகம், இரண்டு திராவிட கட்சிகளையும் ஒரே சமயம் வீழ்த்தி இருக்கிறது.
76 தொகுதிகளில் நேரடி மோதல், வெற்றி
அந்த வகையில் மொத்தம் 76 தொகுதிகளில் திமுக, அதிமுகவை தோல்வியுறச் செய்து இருக்கிறது, தமிழக வெற்றிக் கழகம். தேர்தல் பரப்புரையில் தொடர்ச்சியாக தவெக - திமுக இடையே தான் போட்டி என்று விஜய் உறுதியாக தெரிவித்து வந்தார். அதனை உண்மை என நிரூபிக்கும் விதமாகவே தேர்தல் முடிவுகள் அமைந்தன.
12 தொகுதிகளில் 2,000 வாக்குகளில் தோல்வி
தவெக வென்றுள்ள 108 இடங்களில் பெரும்பாலானவை கடந்த தேர்தலில் திமுக வென்றவையே ஆகும். இரண்டாவது இடத்தில் அதிமுக உள்ளது. இதுபோக, தனிப்பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவாக உள்ள நிலையில், 12 இடங்களில் வெறும் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தவெகவினர் தோல்வியுற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவிடம் 51 தொகுதிகள் பறிப்பு
தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். இந்நிலையில் திமுக உடன் நேரடியாக போட்டியிட்டு 51 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. அதில் சுமார் 40 தொகுதிகள் வடமாவட்டங்களில் இருந்தே கிடைத்துள்ளது.
சென்னையில் 14 இடங்களில் வெற்றி
திமுகவின் கோட்டையாக கருதப்படும் தலைநகர் சென்னையில் இருந்து மட்டுமே 14 எம்எல்ஏக்கள் விஜய் கட்சிக்கு கிடைத்துள்ளனர்.
திமுகவை வீழ்த்திய பல தொகுதிகளில் அமைச்சர்களும் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது தான் பெரிய வியப்பு. துரைமுருகன் போன்ற மூத்த திமுக தலைவர்களே, தவெகவால் தோற்கடிக்கப்பட்டனர்.
அதிமுகவிடம் 25 தொகுதிகள் பறிப்பு
அதிமுக வேட்பாளர்களை நேரடியாக 25 இடங்களில் தவெகவினர் வீழ்த்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலர், தவெகவிடம் வெற்றியை படுகொடுத்தனர்.
அதுமட்டுமின்றி காங்கிரஸ், விசிக, தேமுதிக போன்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் பல இடங்களில் நேரடியாக தவெக வீழ்த்தி, தொகுதிகளை வசப்படுத்தி இருக்கிறது.
இரண்டு பிரதான திராவிட கட்சிகளும் 122 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதன் முடிவில் 18 இடங்களில் திமுகவும், 21 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றன.
நூலிழையில் பறிபோன பெரும்பான்மை
தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் சில கட்சிகளின் ஆதரவை நாடும் சூழலில் விஜய் உள்ளார். ஆனால், வெறும் 2 ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே 12 தவெக வேட்பாளர்கள் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர்.
ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்று இருந்தால், விஜய் ஒரு மகத்தான சாதனையை படைத்து தனிப்பெரும்பான்மையுடன் சாதனை படத்து இருப்பார்.
திருக்கோவிலூரில் விஜய் பரணிபாலாஜி என்பவர் வெறும் 285 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோக 5 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே 19 தவெக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
61 தொகுதிகள், 5000 வாக்குகளில் தோல்வி
வெறும் 5000 வாக்குகள் வித்தியாசத்திலேயே 61 தொகுதிகளுக்கான வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி தோல்விகள் உறுதி செய்யப்பட்டன.
=====================