Union Finance Minister Nirmala Sitharaman advised BJP, to raise questions against brutal DMK rule  BJP Tamil Nadu
தமிழ்நாடு

”திமுக ஆட்சியை கேள்வி கேளுங்க” : பாஜகவினருக்கு நிர்மலா அட்வைஸ்

Nirmala Sitharaman on DMK : தமிழகத்தில் வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை, கேள்வி கேட்கும் திறமை தேவை என்று பாஜகவினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை கூறினார்.

Kannan

பாஜக நிர்வாகிகள் கூட்டம்

Nirmala Sitharaman on DMK : 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக, கோவையில் பாஜh நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

நிதி பகிர்வு - தமிழகம் குற்றச்சாட்டு

பின்னர் முதலிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், ”தமிழகத்தில் எப்பொழுதும் சொல்ல கூடியது, எங்களுக்கு வர வேண்டிய நிதி வரவில்லை. எல்லா பணமும் வட மாநிலங்களுக்கு போய்விடுகிறது. 20 ரூபாய் வரி கட்டினால், அதில் எங்களுக்கு ரூ.2 கூட திருப்பி கைக்கு வருவதில்லை என்பதுதான்.

கோவை தான் நிதி ஆதாரம்

திமுக பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி. கோவைதான் தமிழகத்திற்கு முக்கிய நிதி ஆதாரமாக அதிக வருவாயை கொடுக்கிறது. கோவைக்காரர்கள் எல்லோரும் எழுந்து நின்று, நாங்கள் தான் நிறைய பணம் கொடுக்கிறோம், எங்களுக்கே எல்லா பணமும் வருகிறதா, இல்லையா? நாங்கள் கட்டும் வரியில் எங்களுக்கு எவ்வளவு பணம் திருப்பி வருகிறது என்று கேட்டால் நம்ம அரியலூர் என்னவாகும், ராமநாதபுரம் என்னவாகும்?

திமுக அரசை கேள்வி கேளுங்க

தமிழகத்தில் வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை, நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும். நான்கு விஷயத்தை படிக்க வேண்டும். கல்வி திட்டம் நாடு முழுவதும் எல்லோரும் ஏற்றுக்கொண்டு நன்றாக பயன்படுத்தி வருகிறார்கள். கேரளாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி கூட, பிஎம்ஸ்ரீ கல்வி திட்டம் நமக்கும் வர வேண்டும். கல்வி தரம் உயர வேண்டும் என நினைக்கின்றனர்.

மத்திய அரசை எதிர்ப்பது தான் கொள்கை

கல்விக்காக மத்திய அரசு என்ன திட்டங்கள் கொண்டு வந்தாலும் உடனே, அதை எதிர்த்து தமிழக அரசு போராடுகிறது. திமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி.

மக்கள் மத்திய அரசை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதால் அதன் திட்டங்களை இவர்கள் எதிர்க்கின்றனர்.

நீட் வாக்குறுதி - என்ன ஆச்சு?

ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுகவினர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? தற்போது கிராமப்புற மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். அதை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. சட்டசபையில் பலம் இருக்கிறது என்பதால் பிரதமருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.

எஸ்ஐஆர் - திமுகவுக்கு கலக்கம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், ஏன் உங்களுக்கு கலக்கம் வந்து விடுகிறது. புதிதாக நடைபெறுவது போல திமுகவினர் பேசி வருகிறார்கள். 2004 வரை 7, 8 முறை SIR நடைபெற்றுள்ளது. திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போது கூட சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று இருக்கிறது.

கொளத்தூர் ஒரு தொகுதியிலேயே குழப்பத்திற்கு உரிய வாக்குகள் நிறைய இருக்கின்றன. அவை இறந்தவர்களுடையதா, வெளியூருக்கு சென்றவர்களாலா என்பதை தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். அதற்கு SIR அவசியம். 2026ம் ஆண்டு தேர்தலில், திருப்பத்தை ஏற்படுத்தும் முற்சியை நாம் எல்லோரும் மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

=======