Union Minister Dharmendra Pradhan stated that no one can stop lighting lamp on Thiruparankundram Hill 
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது : பிரதான் உறுதி

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Kannan

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி

ராமேஸ்வரத்தில் காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.

ஒரே பாரதம், உன்னத பாரதம்

இதையடுத்து இன்று காலை அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தர்மேந்திர பிரதான், “காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

எதிர்காலத்தில், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற கருப்பொருளின் கீழ், இன்னும் சிறப்பான கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படும்.

பிரதமர் மோடிக்கு நன்றி

நமது நாட்டின் இரு பகுதிகளுக்கு இடையே இத்தகைய பிரம்மாண்டமான கலாச்சாரப் பாலத்தை உருவாக்கியதற்காக நான் பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசியக் கல்வி

நாங்கள் இப்போது தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இது தேசிய கல்வி கொள்கையின் பரிந்துரையாகும்.

ஆரம்பக் கல்வியில் தமிழ் மொழியை அரசு ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். குழந்தைகளை நாம் சரியாகக் கவனித்துக் கொண்டால், அவர்களே நமது சமூகத்தின் எதிர்காலத் தலைவர்களாக உருவெடுப்பார்கள்” என்றார்.

தீபம் ஏற்றுவது மக்களின் நம்பிக்கை

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது என்பது மக்களின் நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் சார்ந்த விஷயம்.

ஆன்மிக மரபுகள் - மக்களின் உரிமை

அத்தகைய ஆன்மிக மரபுகளைக் கடைப்பிடிக்க யாருக்கும் உரிமை உண்டு. இத்தகைய கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

தீபத்தூணில் தீபம் - யாரும் தடுக்க முடியாது

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணியில் விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. “நீதியரசர் திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்றலாம் என்று கூறிய தீர்ப்புக்கு அனுமதி மறுத்து அரசியல் ரீதியாக இதை தமிழக அரசு கையாளுவது கண்டிக்கத்தக்கது.

மதத்தின் மீதும் இந்துக்கள் புனிதமாக கருதக் கூடிய திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்றுவதை தடுக்க கூடியவர்கள் முட்டாள்கள்.

மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார்.

இந்த விவகாரத்தை அரசியல் நோக்குடன் கையாள்கிறார்கள். திருக்குறளை சமூகத்திலிருந்து எப்படி நீக்க முடியாதோ அதுபோலதான் திருப்பரங்குன்றமும்” என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக கூறினார்.

=======