Vaiko announced suspension of MDMK Deputy General Secretary Mallai Sathya from the party 
தமிழ்நாடு

மதிமுகவில் இருந்து ”மல்லை சத்யா Suspend” : முடிவெடுத்தார் வைகோ

மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக வைகோ அறிவித்து இருக்கிறார்.

Kannan

வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ :

திமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்து தனிக்கட்சி கண்டவர் வைகோ. மதிமுக என்ற அவரது இயக்கம் எழுச்சி பெற்று, சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி தவறுகளால், கடைசியில் திமுக பக்கம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

துரை வைகோ vs மல்லை சத்யா :

திமுக மூலம் ராஜ்யசபா எம்பியான வைகோ, தனது மகன் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டு வந்தார். இதற்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்தவர் மதிமுகவின் துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா. கட்சியின் முதன்மை செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டு, அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதை அவர் விரும்பவில்லை. இதற்கு முத்தாய்ப்பாக மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோவை நிற்கச் செய்தார் வைகோ.

மல்லை சத்யாவுக்கு துரோகி பட்டம் :

இதன்மூலம் கட்சியில் வேறு யாரும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. அப்பா ராஜ்யசபா எம்பி, மகன் லோக்சபா எம்பி என மதிமுக வளர, ஒரு கட்டத்தில் போர்க்கொடி உயர்த்திய மல்லை சத்யாவுக்கு, துரோகி பட்டம் கட்டினார் வைகோ. மதிமுக கூட்டங்களை புறக்கணித்த மல்லை சத்யா, வைகோவையும், துரை வைகோவையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்.

குடைச்சல் கொடுத்த மல்லை சத்யா :

கட்சியில் இருந்து தானாக வெளியேற மறுத்த அவர், ஒரு கட்டத்தில் வைகோவிற்கு உறுத்தலாக மாறினார். அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு வைகோவால் பதிலளிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. அவர் நடத்திய உண்ணாவிரத போராட்டமும் வைகோ, துரை வைகோவை ஆத்திரமடையச் செய்தது. இந்நிலையில், மல்லை சத்யாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்வதாக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மல்லை சத்யா சஸ்பெண்ட் :

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சி விரோத நடவடிக்கைகளில் மல்லை சத்யா ஈடுபட்டு உள்ளார். கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டது, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து இருக்கிறது. எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்து இருக்கிறேன்.

விளக்கம் அளிக்க அனுமதி :

அதன்படி மல்லை சத்யா மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அவர் என்னிடம் விளக்கம் அளிக்கலாம்” இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார். மேலும், மதிமுக உடமைகள், ஏடுகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் மல்லை சத்யாவுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

============