தமிழகத்தில் தவெக ஆட்சி
CPI likely to join CM Vijay Cabinet soon, Marxist deny to take part : சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து போட்டியிட்ட இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காட்சிகள் மாறின. தவெக ஆட்சி அமைக்க 11 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள்,விசிக, ஐயுஎம்எல் ஆதரவோடு முதல்வரானார் விஜய்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக அரசு வெற்றி பெற, அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் அங்கம் வகிக்கின்றன.
வெளியில் இருந்து ஆதரவு
தவெக அரசுக்கு வெளியில் இருந்து கம்யூனிஸ்ட்கள் ஆதரவு கொடுத்து வருகின்றன. மேலும், உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட தங்களது பலத்தை அறிந்து கொள்ள தயாராகி வருகின்றன.
அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட்
இந்தநிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறும் சூழல் வரும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஓசூரில் இருந்து ஒரு அமைச்சர்
ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம் பெறும் சூழல் வரும். அந்த சூழல் வரும் போது இந்த மண்ணிலே இருந்து கூட (ஓசூர்) கம்யூனிச தோழர்கள் அமைச்சர்களாக வருவார்கள். அந்த காலம் நெருங்குகிறது. உங்கள் எதிர்பார்ப்புக்கு வாழ்த்துகள்” எனக் கூறினார்.
அமைச்சராகிறாரா தளி ராமச்சந்திரன்?
சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி மற்றும் திருத்துறைபூண்டி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. தளி தொகுதிதான் ஓசூர் பகுதியை சேர்ந்தது. தளி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் ராமச்சந்திரன்.
தளி தொகுதியில் 2006ல் சுயேட்சையாகவும் 2011, 2021, 2026-ல் இ.கம்யூனிஸ்ட் எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றவர் ராமச்சந்திரன். அவருக்குதான் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை வீரபாண்டியன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் திட்டவட்ட மறுப்பு
இந்தநிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், அமைச்சரவையில் இடம் பெறாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
வீரபாண்டியன் எந்த அடிப்படையில் இடம்பெறுவார் எனக் கூறினார் எனத் தனக்கு தெரியாது, இருப்பினும் அவரிடம் விளக்கம் கேட்போம்.
அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம்
வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு, அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என்பதில் தங்கள் கட்சி உறுதியாக இருப்பதாக சண்முகம் விளக்கம் அளித்தார்.
============