தென்னிந்தியத் திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத ஆளுமைகளுள் ஒருவரும், பழம்பெரும் நடிகையுமான ‘சௌகார்’ ஜானகி (94) காலமானார்.
வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
ஆரம்பகால வாழ்க்கையும் திரையுலக பிரவேசமும்
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931-ம் ஆண்டு பிறந்தவர் ‘சௌகார்’ ஜானகி. இவரது தந்தை தொழிலதிபர் என்பதால் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வசிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
சிறுவயதிலேயே வானொலி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் பங்குபெற்று தனது கலைத் திறமையை வெளிப்படுத்தினார்.
திரையுலக அறிமுகத்திற்கு முன்பே திருமணம்
திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் சென்னை வந்த இவர், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ் ஜோடியாக ‘சௌகார்’ (1950) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்ததால், அப்படத்தின் பெயரே இவருக்கு நிரந்தர அடையாளமாக மாறிப்போனது.
திரையுலக சாதனைகளும் பன்முகத்தன்மையும்
‘வளையாபதி’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார்.
400 க்கும் மேற்பட்ட படங்கள்
‘பாக்கியலட்சுமி’, ‘படிக்காத மேதை’, ‘பாலும் பழமும்’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘தில்லுமுல்லு’ உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சொந்த குரலிலேயே டப்பிங்
சோகம், காதல், நகைச்சுவை என அனைத்து உணர்ச்சிகளையும் அநாயாசமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர். எந்த மொழியில் நடித்தாலும் சொந்தக் குரலிலேயே டுப்பிங் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திரைப்படம் மட்டுமின்றி 300-க்கும் அதிகமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். மேலும் ‘காவியத்தலைவி’, ‘ரங்கராட்டினம்’ ஆகிய படங்களைத் தயாரித்த இவர், திரைப்பட விருது குழுக்களிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
விருதுகளும் அங்கீகாரமும்
கலைத்துறைக்கு இவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 2022-ம் ஆண்டு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்தது. இதுதவிர தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உள்ளிட்ட பல வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்
சமையல், தோட்டக்கலை ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி. அவரது மறைவு, தென்னிந்தியத் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் விஜய்யின் இரங்கல் பதிவு
இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய், பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவிற்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திரைத்துரை உலகத்திற்கு பேரிழப்பு
திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.
சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
======