சாதனை நாயகி சரோஜாதேவி :
Actress Saroja Devi Films Record : 'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்றெல்லாம் அழைக்கப்படும் நடிகை பி. சரோஜா தேவி, ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். 161 படங்களில் தொடர்ச்சியாகக் கதாநாயகியாக நடித்த ஒரே இந்திய நடிகை இவர்தான். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், திலீப் குமார் போன்ற புகழ்பெற்ற நடிகர்களுடன் இவர் நடித்த படங்கள் வரலாறு படைத்தன என்றே சொல்லலாம்.
நளினமான நடனம் மூலம் அசத்தியவர் :
1938ம் ஆண்டு, ஜனவரி 7ம் தேதி மைசூருவில் பிறந்தார் சரோஜாதேவி(Saroja Devi Biography). இவரது தந்தை பைரப்பா, காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றினார். தாய் ருத்ரம்மா, குடும்பத் தலைவியாக இருந்தார். இத்தம்பதிக்கு நான்காவது மகளாகப் பிறந்த சரோஜா தேவி, சிறு வயது முதலே நடனத்தில் தேர்ச்சி பெற்றார். 1955ல் வெளியான கன்னட திரைப்படமான 'மகாகவி காளிதாஸ்' இவரை திரையுலகில் அறிமுகப்படுத்தியது.
கன்னட சினிமாவின் பெண் சூப்பர் ஸ்டார் :
கன்னட சினிமாவின் முதல் 'பெண் சூப்பர் ஸ்டார்' ஆகக் கருதப்பட்ட இவர், 1958ல் 'நாடோடி மன்னன்' படத்தில் எம்.ஜி.ஆருடனும், 'பாண்டுரங்க மகாத்மியம்' என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 1955 முதல் 1984 வரையிலான 29 ஆண்டுகளில், 161 திரைப்படங்களில் தொடர்ச்சியாகக் கதாநாயகியாக நடித்த ஒரே இந்திய நடிகை என்ற சாதனையை சரோஜாதேவி(Saroja Devi) படைத்துள்ளார்.
மேலும் படிக்க : விடைபெற்றார் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி : காளிதாஸ் - ஆதவன் வரை
தாய் சொல்லை தட்டாத சரோஜாதேவி :
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.தொடக்கத்தில், இவர் சினிமாவிற்கு வந்தது இவரது தாயாருக்குப் பிடிக்கவில்லை. பின்னர், இரண்டு நிபந்தனைகளுடன் அவரை நடிக்கச் சம்மதிக்க வைத்தார். 'நீச்சல் உடை அணியக் கூடாது' மற்றும் 'கையில்லாத ரவிக்கை அணியக் கூடாது' என்பதே அந்த நிபந்தனைகள். தனது தாயின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு, சரோஜா தேவி(Saroja Devi Awards) மிகவும் கண்ணியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தார்.
எம்ஜிஆருடன் 26 படங்கள், சிவாஜியுடன் 22 படங்கள் :
ஜெமினி கணேசனுடன் 'கல்யாண பரிசு', சிவாஜி கணேசனுடன் 'பாகப்பிரிவினை', 'பாலும் பழமும்', 'ஆலயமணி', 'புதிய பறவை' மற்றும் எம்.ஜி.ஆருடன் 'திருடாதே', 'பெரிய இடத்துப் பெண்', 'பணக்காரக் குடும்பம்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பே வா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும், ஜெமினி கணேசனுடன் 17 படங்களிலும் இவர் நடித்துள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆருடன் நடித்ததால் 'ராசியான நடிகை' என்ற பெயரையும் பெற்றார். 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பே வா' போன்ற படங்களில் இவர் அணிந்திருந்த புடவைகள், நகைகள் மற்றும் இவரது சிகை அலங்காரம் ஆகியவை அக்கால தென்னிந்தியப் பெண்களிடையே மிகவும் பிரபலமடைந்தன.
தனது கணவர் பெயரிலான அறக்கட்டளை பணிகளைக் கவனித்து வந்த சரோஜாதேவி(Saroja Devi Death), திருமலை திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். சரோஜாதேவியின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமின்றி, தெலுங்கு, கன்னட சினிமா துறைக்கும் பேரிழப்பாகும்.
=====