Vijay, Annamalai condemned suicide of young woman in Mannachanallur, due to DMK's Rs 8,000 coupon drama google
தமிழ்நாடு

ரூ. 8,000 கூப்பன் ”இரிடியம் விற்பனையா?, மண்ணுளி பாம்பா?” : மண்ணச்சநல்லூரில் இளம்பெண் தற்கொலை : விஜய், அண்ணாமலை கேள்வி...

திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, விஜயும், அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kannan

திமுகவின் ரூ.8,000 கூப்பன்

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டு இருக்கும் பதிவில், “மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.

திமுகவிற்கு தோல்வி பயம்

2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு.

சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா?

யாரை ஏமாற்ற கூப்பன்?

உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்?

திமுகவினர் ஆபாச பேச்சு, இளம்பெண் தற்கொலை

இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?

கயவர்களை கைது செய்க

இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்” என்று விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆபாசமாக பேசி, அடித்த திமுகவினர்

இளம்பெண் தற்கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, “ மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

கூப்பன் வழங்கி ஏமாற்றும் திமுக

கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மக்கள் மீது மரியாதை கிடையாது

திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் வாக்களிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது.

தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

திமுகவை புறக்கணிக்க வேண்டும்

வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது” என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

=================