Vijay-led administration highlight book procurement scam, DMK, focus on law and order issues source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

TVK கையில் புத்தக ஊழல், DMK கையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை : பரபரக்கும் அரசியல் களம்!

முந்தைய திமுக அரசுக்கு எதிராக புத்தக கொள்முதல் ஊழலை விஜய் அரசும், தவெக அரசுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கையில் எடுத்து இருப்பது தமிழக அரசியலை பரபரப்பாக்கி உள்ளது.

Kannan

தமிழகத்தில் தவெக ஆட்சி

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளையும் வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தவெகவிற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

தவெக - திமுக மோதல்

தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் தவெக அரசும் அதை தினசரி சமாளித்து வருகிறது. திமுக - தவெக இடையிலான மோதல் வலுப்பெற்று வருகிறது.

எகிறி அடிக்கும் திமுக

இந்த நிலையில், ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் விஜய் அரசு மீது திமுக சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டை மிகப்பெரிய அளவில் முன்வைத்து வருகிறது.

திமுக-வின் ஐடி விங் பக்கத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும், தினசரி நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களையும் பட்டியலிடப்பட்டு விமர்சிக்கப்படுகின்றன.

ஊழலை கையிலெடுத்த தவெக

மறுபக்கம் கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை ஒவ்வொன்றாக வெளியில் கொண்டு வரும் வேளையில் தவெக அரசு ஆர்வமாக உள்ளது. எவ. வேலு, கே.என்.நேரு வீடுகளில் அதிரடி ரெய்டை நடத்திய தவெக அரசு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை ரூபாய் 400 கோடி ஊழல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

விஸ்வரூபம் எடுக்கும் நூலக ஊழல்

இந்த சூழலில், கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக தவெக அரசு முன்வைத்துள்ள விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தினசரி பல்வேறு ஆதாரங்களை தவெக அரசு வெளியிட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக

இந்தச் சூழலில், பொதுமக்களை துணை சபாநாயகர் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதும், மறுபக்கம் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை திமுக மிகப்பெரிய அளவில் கையில் எடுத்துள்ளது.

திமுக தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கையில் எடுத்தும், தவெக கடந்த கால திமுக அரசின் புத்தக ஊழல் உள்ளிட்டவற்றை மிகப்பெரிய அளவில் கையில் எடுத்துள்ளதால் தமிழக அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், தவெக எம்எல்ஏ-க்கள் அனைவரையும் முதலமைச்சர் விஜய் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அவசரமாக அழைத்துள்ளார்.

சாட்டையை சுழற்றுவாரா விஜய்?

நாளை நடக்கும் இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் அதிருப்தியான செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. சர்ச்சையில் சிக்கி இருக்கும் தவெக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கைகளை முதல்வர் விஜய் எடுப்பார் என்று கூறப்படுகிறது.

==================