தமிழக வெற்றிக் கழகம்
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கூட்டணிகளும் மாறுகின்றன. தோல்வியுற்ற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
அதிமுகவிற்கு பலத்த அடி
குறிப்பாக இந்த விவகாரத்தில் அதிமுக பெரும் சரிவை சந்தித்து வருகிறது. வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் சேர்ந்து வருகிறார்கள்.
காங்கிரசின் விஜயதரணி
ஒரு காலத்தில் தமிழக காங்கிரசில் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்தவர் விஜயதாரணி. இவர் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த தொகுதி விளவங்கோடு.
சட்டமன்றத்தில் காங்கிரஸ் முதன்மை கொறடா, கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விஜயதரணி வகித்தவர்.
எம்பியாக அதிக ஆர்வம்
தேசிய அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், எம்பியாக இருந்த எச். வசந்தகுமார் மறைவை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால், வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பாஜகவில் விஜயதரணி
இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த விஜயதரணி, 2024ம் ஆண்டு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும் பாஜகவில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
இதனால் விஜயதரணி அதிருப்தியில் இருந்து வந்ததால் அவருக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
விளவங்கோட்டில் விஜயதரணி தோல்வி
ஆனால், தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் கே.மைக்கேல் குமார் இங்கு வெற்றி பெற்றார். விஜயதரணிக்கு 3வது இடம் தான் கிடைத்தது.
கட்சி நிர்வாகிகள் தனக்காக வேலை செய்யவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த விஜயதரணி, பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைய முடிவு செய்தார்.
தவெகவில் விஜயதரணி
அதன்படி, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
தவெகவில் அதிமுக நிர்வாகிகள்
அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்பிக்கள் பால கங்கா, வனரோஜா, இளவரசன் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர்.
=================