Vijay's Cabinet: A Blend of the Experienced and the Dynamic - From Sengottaiyan to Kamali! The Full Details source:x.com
தமிழ்நாடு

அனுபவம் மிக்கவர்கள், துடிப்பானவர்களுடன் விஜய் அமைச்சரவை : செங்கோட்டையன் முதல் கமலி வரை! : முழு தகவல்...

78 வயதாகும் செங்கோட்டையன் தொடங்கி, 28 வயது கமலி வரை துடிப்புடன் களமிறங்கி இருக்கிறது விஜயின் சர்க்கார்.

Kavitha prasanna

முதல்வர் விஜய் தலைமையில் 32 அமைச்சர்களுடன் தவெக அரசு முழு வீச்சில் களமிறங்கி இருக்கிறது. இளம் அமைச்சர்களுடன் துடிப்பான செயல்பாட்டை தர இருக்கிறது தவெகஅரசு.

ஆச்சர்யப்படுத்தும் அமைச்சரவை

4 பெண் அமைச்சர்கள், 7 பேர் பட்டியலினத்தவர் என வியக்க வைக்கிறது அமைச்சரவை, விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து கட்சிக்குள் வந்து, தேர்தலில் வெற்றி பெற்ற 16 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.

78 வயதாகும் செங்கோட்டையன் தொடங்கி, 28 வயது கமலி வரை துடிப்புடன் களமிறங்கி இருக்கிறது விஜயின் சர்க்கார்.

தமிழக அரசியலில் வரலாற்று சாதனை படைத்த தவெக

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத வண்ணம், தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், நிர்வாகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல தற்போது அதிரடியான புதிய முடிவுகளை மேற்கொண்டு வருகிறார்.

முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் பதவி பிரமானம்

தேர்தல் களத்தில் தனி முத்திரை பதித்த தவெக, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மிக முக்கியத் துறைகளைக் கவனிப்பதற்காக 9 அமைச்சர்கள் மட்டும் உடனடியாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஆட்சி, நிர்வாகத்தை நிலைநிறுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.

முதல்வர் விஜய்யின் முடிவு

ஆட்சிப் பொறுப்பேற்று 10 நாட்கள் ஆன நிலையில், அனைத்துத் துறைகளையும் முழு வீச்சில் செயல்படுத்தவும், மக்கள் நலத்திட்டங்களை விரைவுபடுத்தவும் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் விஜய் முடிவு செய்தார்.

அமைச்சரவை விரிவாக்க நிகழ்வு

அதன்படி, இன்றைக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா ஆளுநர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் புதிய முகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிக்கப்பட்டதுடன், மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்பட்டன.

எந்தெந்த அமைச்சர்களுக்கு எந்தெந்த இலாகா?

  1. நிர்வாகச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் துறைகள் அதிரடியாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

  2. அனுபவம் வாய்ந்த மூத்த தலைவரான அமைச்சர் செங்கோட்டையனுக்கு, மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய மிக முக்கியத் துறையான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

  3. அமைச்சர் மரிய வில்சனுக்கு சட்ட விவகாரங்கள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பொறுப்புடன் நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சிதுறை வழங்கப்பட்டுள்ளது.

  4. 'எம்.ஜி.ஆர். அதிமுக' என்ற கட்சியைத் தொடங்கி, பின்னர் தவெக-வில் இணைந்த ரஞ்சித் குமாருக்கு வனத்துறை வழங்கப்பட்டுள்ளது.

  5. கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ராஜேஷ்குமாருக்கும் கூட்டணிக் கட்சி அடிப்படையில் சுற்றுலாத்துறை அமைச்சராக முக்கியத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையின் முக்கியத்துவம்

இந்த அமைச்சரவை வெறும் ஆட்சிப் பொறுப்பிற்கானது மட்டுமல்லாமல், சமூக நீதி மற்றும் பிராந்திய சமநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது பட்டியலின பிரதிநிதித்துவம். சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் ஒட்டுமொத்தமாக 7 பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகியுள்ளனர். இதில் தவெக சார்பில் 6 பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.

வரலாற்று திருப்பமாகப் பார்க்கப்படும் அமைச்சரவை

அமைச்சரவை பலம் முதல்வருடன் சேர்த்து 33ஆக அதிகரித்திருக்கும் நிலையில், பள்ளிகல்வித்துறை அமைச்சராக எழும்பூர் தொகுதி ராஜ்மோகன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக அவிநாசி தொகுதி கமலி,

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக ஒட்டப்பிடாரம் தொகுதி மதன் ராஜா, கூட்டுறவுத்துறை அமைச்சராக அரக்கோணம் தொகுதி காந்திராஜ் அமைச்சர்களாகி உள்ளனர்.

அதேபோல் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக ராசிபுரம் எம்எல்ஏ லோகேஷ் தமிழ் செல்வன், வெளிநாட்டு தமிழர் நலன் அமைச்சராக ஸ்ரீபெரும்புதூர் தென்னரசு,

உயர்கல்வித்துறை அமைச்சராக மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன் என ஏழு பேரை அமைச்சர்களாக்கி அழகு பார்த்து இருக்கிறார் முதல்வர் விஜய். இது வரலாற்று திருப்பமாகவும் பார்க்கப்படுகிறது.

தலைநகருக்கு முன்னுரிமை

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முதலமைச்சர் விஜய் உட்பட மொத்தம் 7 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் கூடுதல் சிறப்பாக துடிப்புமிக்க இளம் வயது அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்று உள்ளனர்.

  1. தவெக அமைச்சரவையில் செங்கோட்டையன் மட்டுமே 70 வயதை கடந்தவராக உள்ளார்.

  2. முதலமைச்சர் விஜய்க்கு 51 வயதாகிறது.

  3. அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு வென்ற கமலிக்கு 28 வயது.

மொத்தத்தில் 40+ வயதை கொண்ட 29 பேர் இடம்பெற்று இருக்கும் இளம் அமைச்சரவை ஆட்சி பொறுப்பேற்றது இதுதான் முதன்முறை.

வழக்கமான அரசியல் பாணியை உடைத்து, இந்த அமைச்சரவையில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

நிர்வாகத்தில் புதிய சிந்தனைகளையும், வேகத்தையும் புகுத்தும் நோக்கில், முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்த பல இளம் வயது பட்டதாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அமைச்சர் பதவிகளை வழங்கியுள்ளார்.

சினிமா ரசிகர் மன்றம் டூ அமைச்சரவை!

இந்த அமைச்சரவையின் மிக சுவாரசியமான மற்றும் நெகிழ்ச்சியான பகுதி இதுதான். விஜய் மக்கள் இயக்கத்தின் அடிமட்டத் தொண்டர்களாக, ரசிகர் மன்றக் கொடிகளைப் பிடித்து உழைத்த 16 நிர்வாகிகளுக்கு நேரடியாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவியை அடையலாம்

ஒட்டுமொத்த அமைச்சரவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள், ரசிகர் மன்றத்திலிருந்து தங்களை அரசியல் ரீதியாக வளர்த்துக் கொண்டவர்களுக்குக் கிடைத்துள்ளது. சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவியை அடையலாம் என்பதை இது நிரூபித்துள்ளது.

முத்திரை பதிக்கும் 4 பெண் அமைச்சர்கள்

பெண்களுக்கு அதிகாரத்தில் சமபங்கு என்ற தவெக-வின் கொள்கைப்படி, இந்த புதிய அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மகளிர் மேம்பாடு, சமூக நலம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகளை வழிநடத்தும் பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களின் பங்களிப்பு, தமிழகத்தின் மகளிர் முன்னேற்றத்திற்குப் புதிய பாதையை வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா தொடங்கி எடப்பாடி வரை

முதல்வர் விஜய் தொடங்கி அமைச்சர் கமலி வரை அனைவரும் புதுமுகங்கள். முதல்முறை அமைச்சர்களாகியுள்ளனர். இவர்களில் செங்கோட்டையன் மட்டுமே விதிவிலக்கு. ஜெயலலிதா தொடங்கி எடப்பாடி வரை பலமுறை அமைச்சராக இருந்து அனுபவம் பெற்றவர்.

புதிய அமைச்சரவை மீதான மக்களின் எதிர்பார்ப்பு

எனினும் இளைஞர்களின் வேகம், மூத்தவர்களின் விவேகம், பெண்களின் ஆளுமை மற்றும் சாதாரண ரசிகர்களின் உழைப்பு ஆகிய அனைத்தும் சரியாகக் கலந்து உருவாக்கப்பட்டுள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்த புதிய அமைச்சரவை, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது!

=========