Former BJP State President Annamalai has issued a statement on his X page regarding the Vilathikulam incident. source:google
தமிழ்நாடு

விளாத்திகுளம் சம்பவம், ஆயுள் தண்டனை கைதி வெளியில் வந்தது எப்படி? : CCTV-யை ஆராய 10 நாட்களா? : அண்ணாமலை கேள்வி!

Annamalai on Vilathikulam Incident : விளாத்திகுளம் சம்பவம் குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

S Kavitha

சரித்திர குற்றவாளியை கண்காணிக்கத் தவறியது ஏன்? அண்ணாமலை கேள்வி!

விளாத்திகுளம் சம்பவம்

Annamalai on Vilathikulam Incident : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை அறிக்கை

அந்த அறிக்கையில் அவர், ஒரு சரித்திர குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழக காவல்துறை அந்த குற்றவாளியை கண்காணிக்காமல் என்ன செய்தது, முதல்வர் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

குற்றவாளியை கைது செய்யாத காவல்துறை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.

காவல்துறை நடத்தையில் எழும் கேள்விகள்

குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.

65 வயது பெண்மணிக்கு பாலியல் தாக்குதல்

கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜாமீன்

வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

திமுக அரசின் மெத்தனப்போக்கு

ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது.

சரித்திரப் பதிவேடு குற்றவாளியை கண்காணிக்கத் தவறியது ஏன்?

மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.

CCTV - யை ஆராய 10 நாட்களா?

மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.

முதல்வர் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்

பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர்

இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

இதனிடையே குற்றவாளி கைது செய்யப்பட்டதை அடுத்து மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.