Walgreens Global Capability Centre to be Set Up in Chennai
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலக முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமான 'வால்கிரீன்ஸ்' (Walgreens), இந்தியாவில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre - GCC) தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.
இது தொடர்பாக TN DIPR வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில்,
தமிழ்நாடு அரசால் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் முதலாம் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும்,
வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையிலும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைக்கவுள்ள தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
அமைவிடம் மற்றும் வேலைவாய்ப்பு
சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள OMR GCC வழித்தடத்தில் உள்ள தரமணி DLF டவுன்டவுன் வளாகத்தில் இம்மையம் நிறுவப்படவுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் வணிக சேவைகளை மையமாகக் கொண்டு இயங்கவுள்ள இம்மையம் மூலம், முதலாம் ஆண்டில் 250 பேருக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும், வரும் ஆண்டுகளில் இது மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கும் வாய்ப்பு
இந்தியாவிலேயே முதன்முறையாக வால்கிரீன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது மையத்தை அமைப்பது, மாநிலத்தின் ஜிசிசி வளர்ச்சிப் பயணத்திற்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வின் போது, தமிழ்நாட்டிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குமாறு முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்தார்.
பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்
இவ்விழாவில் தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
====