Want to Enroll as a Voter? Special Camp on October 10, Says Election Commission Google
தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? : அக். 10ம் தேதி சிறப்பு முகாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

18 வயது நிறைவடைந்த இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் பயன்பெறலாம்; அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் ...

NARENDRAN K

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்காக வரும் அக்டோபர் 10-ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள இளம் வாக்காளர்களை அதிகளவில் பதிவு செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வாக்காளர்களுக்கு சிறப்பு வாய்ப்பு :

எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) பணிகள் நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புதிதாக வாக்களிக்கும் தகுதி பெற்ற இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, அக்டோபர் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் விழிப்புணர்வு மற்றும் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 10-ம் தேதி மாவட்டங்களின் தேவைக்கேற்ப சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியும் அறிவிப்பு :

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்ய விரும்பும் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்காக அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் தேவையான ஆவணங்களுடன் நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களுக்கு கூடுதல் கவனம் :

முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களின் பதிவை அதிகரிக்கும் வகையில், நகர்ப்புற பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்கு இந்த முறை சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அதிகளவிலான இளைஞர்களை ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்கச் செய்வதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

=================