warning notice has been issued by the producer of the film 'Jananayagan' regarding the leaked footage. google
தமிழ்நாடு

Jana Nayagan : ‘ஜனநாயகன்’ காட்சிகள் இணையத்தில் கசிவு : ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு : தயாரிப்பாளர் எச்சரிக்கை நோட்டீஸ்!

‘ஜனநாயகன்’ படக் காட்சிகள் கசிந்த விவகாரத்தில், தயாரிப்பாளர் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

Kannan

விஜயின் ‘ஜனநாயகன்’

விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. தணிக்கைச் சிக்கலால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால், தேர்தலுக்கு முன்பு வெளியானால், அது அவருக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜனநாயகன் படத்தில் இடம்பெற்று இருக்கும் அரசியல் பஞ்ச் டயலாக்குகள், தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

இணையத்தில் கசிவு

இந்தச் சூழலில், ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதை இணையத்தில் கசிய விட்டவர்கள் யார்? விஜய்க்கு எதிரான சதியா இது என்ற ஐயமும் எழுந்துள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

வாட்ஸ் அப் , டெலிகிராம் , ஃபேஸ்புக் , எக்ஸ் என அனைத்து சமூக வலைதளங்களில் ஜனநாயகன் படத்தின் காட்சிகள் கசிந்துள்ளன. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

5 நிமிட வீடியோ

விஜயின் அறிமுக காட்சி மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. சுமார் 5 நிமிடத்துக்கு மேலான வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதேபோல், ஜனநாயகனின் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் காட்சிகளும், படத்தின் அறிமுக காட்சியும் என சுமார் ஐந்து நிமிட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு

இதுபற்றி கருத்து தெரிவித்த ஆதவ் அர்ஜூனா, மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இதன் பின்னணியில் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

தயாரிப்பாளர் எச்சரிக்கை

இந்நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் சட்டபூர்வமாக ஓர் எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

அதில், கசிந்த ‘ஜனநாயகன்’ காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ் விவரம் வருமாறு

‘நான் கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர். எனது கட்சிக்காரரின் அறிவுறுத்தல்களின்படி இந்தப் பொது அறிவிப்பை வெளியிடுகிறேன்.

எனது கட்சிக்காரர், விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஒடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.

'ஜனநாயகன்' திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பல மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன என்பது எனது கட்சிக்காரரின் கவனத்துக்கு மிகுந்த அதிர்ச்சியுடனும் அவசரத்துடனும் வந்துள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொலிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும்.

இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கெனவே உரிய சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார்.

மேலும், இத்தகைய சட்டவிரோதப் பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=======