Weather forecast: Heavy rain likely in 8 districts including Coimbatore, Salem, Theni  google
தமிழ்நாடு

வானிலை முன்னறிவிப்பு : கோவை, சேலம், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோவை, சேலம், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை (மே 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

Rohini

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது

மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் மே 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது

கனமழை பெறும் மாவட்டங்கள்

வானிலை மையம் தெரிவித்துள்ளதுப்போல் ,நாளை (மே 26), கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதிகமான வெப்பநிலைக்கும் வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது

சென்னையை பொறுத்த வரையில்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 88 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது

சூறாவளிக் காற்றும் வீசும்

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 29-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

அதிகபட்ச மழைப்பதிவு

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 11 செமீ, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 9 செமீ,

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், திருச்சி மாவட்டம் நந்தியாறில் தலா 7 செமீ, கரூர் மாவட்டம் ஆனைப்பாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, நீலகிரி மாவட்டம் கெத்தை, சேலம் மாவடடம் மேட்டூரில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

==========================