பகலில் வெயில், இரவில் மழை
சூப்பர் எல் நினோ தாக்கத்தால், தமிழ்நாட்டில் பகலில் வெயில் வாட்டுகிறது. மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கிறது.
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
இதன் காரணமாக, டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. மழைக்காலம் தொடங்கும் போதெல்லாம், மக்களை அச்சுறுத்தும் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக டெங்கு காய்ச்சல் உருவெடுக்கிறது. இந்த ஆண்டும் டெங்குவின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஏராளமானோர் சிகிச்சை
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. மருத்துவமனைகளில் உள்ள டெங்கு காய்ச்சல் வார்டுகள், நிரம்பி வழிகின்றன.
கொசு ஒழிப்பு - நடவடிக்கை தீவிரம்
டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொசுக்களை ஒழிக்கவும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒருபக்கம் டெங்கு பாதிப்பு என்றால், இன்னொரு பக்கம் உண்ணி காய்ச்சலும் அதிகரித்து வருகிறது.. காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
உண்ணி காய்ச்சல் - மாணவர் உயிரிழப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், இதை மறுத்த சுகாதாரத்துறை ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்ற உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு தான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவித்தது.
பாக்டிரீயா கிருமியால் வரும் காய்ச்சல்
உண்ணிக் காய்ச்சல் என்பது பாக்டீரியா கிருமியால் வரும் காய்ச்சல் ஆகும். ஆள் உயரத்துக்கு வளரும் புல், புதர்கள் மற்றும் வயல்வெளிகளில் வாழும் ஒரு வகை உண்ணி மற்றும் பூச்சி கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகிறது.
முன்பு காடுகள் மற்றும் வயல்வெளிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த நோய் பரவி வந்தது. ஆனால், தற்போது பருவநிலை மாற்றம் மற்றும் மக்களின் இடப்பெயர்வு காரணமாக அனைத்து இடங்களிலும் பரவலாக நோய் காணப்படுகிறது.
அச்சம் கொள்ளத் தேவையில்லை
ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை இந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த காய்ச்சலை கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மற்ற காய்ச்சலை போன்று சாதாரணமாக உடல்வலி, பசியின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
“வயல்வெளிகள், புல்வெளிகளில் நடக்கும் போது, பேன்ட், ஷூ, முழு கை சட்டை அணிய வேண்டும். டெங்கு காய்ச்சல் போல், அதிக காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, வறட்டு இருமல் போன்றவை இருக்கும். குறிப்பாக, 4 மணிக்கு காய்ச்சல் இல்லாமல் இருந்தவருக்கு, 4:15 மணியளவில் அதிகளவில் காய்ச்சல் பாதிப்பு இருக்கும்.
உண்ணிக் காய்ச்சலை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம். உரிய சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு, இதய பாதிப்பு ஏற்படும். அவ்வாறு வந்தாலும் சிகிச்சை அளிக்கப்படும்.
ஆனால், இணை நோயாளிகள் தாமதமாக வரும்போது உயிரிழப்பு ஏற்படும். இந்த நோய்க்கான பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்புக்கு உண்ணிக் காய்ச்சல் எனப்படும் ஸ்கரப் டைபஸ் பாதிப்பு தான் காரணம்.
டெங்கு போன்றே காய்ச்சல், தலைவலி, வாந்தி என இருக்கும். பூச்சி கடிக்கும் இடத்தில் ஒரு தழும்பு போன்ற வடு இருக்கும்.
டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று விளக்கம் அளித்தார்.
===================