Premalatha Vijayakanth Statement DMDK TN Power Cut Electricity Tariff google
தமிழ்நாடு

"மின்கட்டண உயர்வை திரும்பப் பெறுக : மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" : பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெறவும் தவெக அரசுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை.

Kavitha prasanna

Premalatha Vijayakanth Statement DMDK TN Power Cut Electricity Tariff

தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் , தமிழகத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின்வெட்டுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரும் கடும் அவதி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்னை மற்றும் முந்தைய மாதங்களை விடக் கூடுதலாக வசூலிக்கப்படும் மின்கட்டணம் குறித்த புகார்களைத் தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டு மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாகப் பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தற்போதைய நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பெரிதும் முடக்கியுள்ளது.

தமிழகத்தை மீண்டும் மின்மிகை மாநிலமாக்குக

மின்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாகும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தேமுதிக சார்பில் பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.

மேலும் மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் இந்தப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்.

கட்டண உயர்வைத் திரும்பப் பெறுக

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகளுக்குத் தடையற்ற மின்சாரம்

விவசாய உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க, விவசாயத்திற்கான தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் இலவச மின்சாரத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.

பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கென, வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரத்தியேக புதிய அறிவிப்புகளை இந்த அரசு வெளியிட வேண்டும்.

அதன் மூலம் தமிழகத்தை மீண்டும் ஒரு 'மின்மிகை மாநிலமாக' உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

=====