திமுக கூட்டணியில் மதிமுக
9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் மதிமுக அங்கம் வகித்து வருகிறது. சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை திமுகவுடன் இணைந்தே மதிமுக சந்தித்து இருக்கிறது.
மக்களவை தேர்தலில், திருச்சி தொகுதியில் போட்டியிட்ட வைகோ மகன் துரை வைகோ வெற்றி பெற்று எம்பியானார். சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் 4 தொகுதிகளில் களம் கண்ட மதிமுக 2ல் வெற்றி பெற்றது.
துரை வைகோவிற்கு பதவி
2022ம் ஆண்டு மதிமுகவுக்குள் தனது மகன் துரை வைகோவை கொண்டு வந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, அவரை முதன்மைச் செயலாளர் ஆக்கினார்.
எதிர்த்தவர்கள் வெளியேற்றம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் திருப்பூர் துரைசாமி, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், புலவர் செ.செவந்தியப்பன், பொடா அழகுசுந்தரம் உள்ளிட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திமுகவில் இணைய தொடர் முயற்சி
அதிருப்தி நிர்வாகிகள் பலரும் நீண்ட நாட்களாகவே திமுகவில் இணைய முயற்சி செய்து வந்தனர். ஆனால், திமுக கூட்டணியில் மதிமுக நீடித்ததால், அதிருப்தியாளர்களைக் கட்சியில் இணைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மறுத்து வந்தார்.
மதிமுகவிற்கு திமுக பச்சைக்கொடி
இந்நிலையில், திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மதிமுக அதிருப்தி நிர்வாகிகளை இணைத்துக் கொள்ள திமுக தலைமை பச்சைக் கொடி காட்டியது.
திமுகவில் இணைந்த நிர்வாகிகள்
இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்த மதிமுக முன்னாள் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
திமுகவில் மதிமுக மூத்த தலைவர்கள்
முக்கியமாக, மதிமுகவின் மூத்த தலைவர்களான புலவர் செ. செவந்தியப்பன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், பொடா அழகுசுந்தரம், ஆர்.எம்.எஸ்.சேகர், விடுதலைவேந்தன், டி.ஆர்.ஆர்.மதியழகன் என சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், முக்கிய நிர்வாகிகள் 150-க்கும் மேற்பட்டோர் திமுகவில் சேர்ந்தனர்.
வைகோவின் நெருங்கிய ஆதரவாளர்கள்
அழகுசுந்தரம், புலவர் செவந்தியப்பன் ஆகியோர் வைகோவுடன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்தவர்கள் ஆவர்.
இதன் மூலம் மதிமுக கூடாரம் காலியாகி வருவது தெரிகிறது. பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் பல்டி அடித்து இருக்கிறார்கள். அவர்கள் திமுக எம்எல்ஏக்களாக தொடர விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
இதனால், கூட்டணி மாற்றத்தில் வைகோ எடுத்த முடிவு பெரிய தவறில் முடிந்து விட்டதாக, மதிமுக மூத்த நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
=====