"You can whistle for an actor, but you cannot hand over the country": Prakash Raj lashes out at Vijay! source : google
தமிழ்நாடு

"நடிகருக்காக விசில் அடிக்கலாம், நாட்டை கொடுக்க முடியாது": விஜயை தாக்கிப் பேசிய பிரகாஷ் ராஜ் !

சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது குறித்துப் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்தார் பிரகாஷ் ராஜ்.

S Kavitha

prakashraj spoke about tvk vijay

சினிமாவில் தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம். ஆனால் நிஜத்தில் அப்படி ஆக முடியாது. நடிகருக்காக விசில் அடிக்கலாம். ஆனால் நாட்டை தூக்கிக் கொடுக்க முடியாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் சினிமா அரசியல் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் பிரசாரம்

பழநி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் தோழர் என். பாண்டி-க்கு ஆதரவாக, அக்கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் அணிகள் ஒருங்கிணைத்த 'இளைஞர் கலை விழா' நடைபெற்றது.

பிரிவினைக்கு எதிரான தேர்தல்

இதில் கலந்து கொண்டு பேசிய பிரகாஷ் ராஜ், இந்தத் தேர்தல் வெறும் கட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல; இது ஒற்றுமைக்கும், பிரிவினைக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று குறிப்பிட்டார்.

அதிகாரத்தின் மீதே ஆசை

"உங்கள் வாக்கு ஒற்றுமைக்கா? பிரிவினைக்கா? என்பதை முடிவு செய்யுங்கள். மதுரையை இன்னொரு மணிப்பூராக மாற்றச் சிலர் துடிக்கிறார்கள்.

திருப்பரங்குன்றத்தில் பிரச்சினையை உருவாக்கியவர்கள், அடுத்து பழநிக்கும் வர இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்துக்கள் மீது அன்பு இல்லை, அதிகாரத்தின் மீதே ஆசை," என பேசினார்.

மூன்று 'மாடல்' அரசியல்

தமிழக அரசியல் தற்போது மூன்று விதமான மாடல்களுக்கு இடையே சிக்கியுள்ளதாக அவர் கூறினார். அதன்படி திராவிட மாடல், அடிமை மாடல்,சினிமா மாடல் என ஒவ்வொன்றாக பேசினார்.

திராவிட மாடல்: கல்வி கொடுத்தது, மொழியைக் காப்பது, இன மானத்திற்காகப் போராடுவது.

அடிமை மாடல்: தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகத்தை இந்த மாடல் ஆதரிப்பதாக பிரகாஷ்ராஜ் சாடினார்.

சினிமா மாடல்: திரையில் தோன்றும் பிம்பங்களை வைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்வது.

விஜய் மற்றும் சினிமா அரசியல் குறித்து விமர்சனம்

சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது குறித்துப் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்தார்.

சினிமாவில் மட்டும் தான் முதல்வராகலாம்:

"சினிமாவில் மட்டும்தான் ஒரே பாடலில் மருத்துவர், பொறியாளர் ஏன் முதலமைச்சராகக் கூட ஆகிவிடலாம். ஆனால் நிஜத்தில் அது நடக்காது. மக்களுக்கோ, மொழிக்கோ, தன்மானத்துக்கோ பிரச்சினை வந்தபோது அந்த நடிகர் வந்து நின்றிருக்கிறாரா?

ஒரு நட்சத்திரம் என்ற அந்தஸ்தோ, திரையில் தோன்றும் கதாபாத்திரங்களோ அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தகுதியாகி விடாது."என்றார்.

விசில் அடிக்கலாம் நாட்டை கொடுக்க முடியாது:

மேலும், "நடிகருக்காக விசில் அடிக்கலாம், ஆனால் நாட்டைத் தூக்கிக் கொடுக்க முடியாது. அரசியலில் சினிமா மாடல்களுக்கு ஆதரவாக வாக்களிக்காதீர்கள்," என்று அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.