சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்பவர் காவல் நிலைய விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக 5 காவலர்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
சிவகங்கை மாவட்ட எஸ்பி. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது போதாது என போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றன.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் சரமாரியாக கேள்வி எழுப்பி அரசை சாடி இருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனிடம் பேசிய நபர் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
யாரோ ஒருவரை அவர் தொடர்பு கொண்டு ‘சார்’ எனக் குறிப்பிட்டு பேசினார். இதை முன்வைத்து ‘யார் அந்த சார்’ என்று அதிமுக கேள்வி எழுப்பி ஆளும் கட்சியை திணற அடித்தது. தமிழக அரசியலிலும் இந்த வார்த்தை தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதேபோன்று, திருப்புவனம் காவல்நிலைய மரணத்திலும் ‘யார் அந்த சார்’ என்ற வார்த்தை ட்ரண்டிங் ஆகி, பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
நகை திருட்டு வழக்கில் சென்னையில் இருந்து ஒரு முக்கிய நபர் பேசிய பிறகே காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். குறிப்பாக அஜித்தை கோவில் வளாகத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி உள்ளனர்.
அவர் சரமாரியாக தாக்கப்பட்டும் இருக்கிறார். இது தொடர்பாக இன்று வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண உடையில் இருக்கும் காவலர்கள் அவரை அடித்ததுதான் அந்தக் காட்சி.
காவலாளி அஜித் மரணத்திற்கு பின்னால் பெரும் புள்ளி யாரோ தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது. முழுமையான விசாரணையை தமிழக அரசு நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும். இல்லையென்றால், காவலர்கள் கைது, விசாரணையோடு இந்த லாக்அப் மரணமும் மூடி மறைக்கப்படும் எனத் தெரிகிறது.
====