Chinas Shenzhou-22 Launched to Tiangong Space Station to Rescue Chinese Astronaut Stuck in Space Successfully Docked Latest News in Tamil Google
தொழில்நுட்பம்

டாக் செய்யப்பட்டுள்ள ஆளில்லா விண்கலம்-சீன விண்வெளி வீரர்கள் சாதனை!

Chinese Astronaut Stuck in Space Shenzhou-22 Update in Tamil : 'ஆளில்லா' சென்சோ-22 விண்கலம், வெற்றிகரமாக விண்வெளி நிலையத்துடன் 'டாக்' செய்யப்பட்டுள்ளது.

Baala Murugan

டாக் செய்யப்பட்ட விண்கலம்

Chinese Astronaut Stuck in Space Shenzhou-22 Update in Tamil : 26 நவம்பர் 2025 சீனாவுக்கு சொந்தமான தியான்கொங் விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களை மீட்பதற்காக நேற்று (நவம்பர் 25) விண்ணில் ஏவப்பட்ட 'ஆளில்லா' சென்சோ-22 விண்கலம், வெற்றிகரமாக விண்வெளி நிலையத்துடன் 'டாக்' (Dock) செய்யப்பட்டுள்ளது.

சிஎம்எஸ்ஏ அறிவிப்பு

சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த சென்சோ-22 விண்கலம், ஏவப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டில் இருந்து பிரிந்து அதன் சுற்றுப் பாதையில் நுழைந்தது. 'சுற்றுப் பாதையில் நுழைந்த பிறகு, விரைவாக முன்னேறிய விண்கலம், நேற்று பிற்பகல் 3:50 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 1:20 மணி) தியான்கொங் விண்வெளி நிலையத்துடன் இணைந்ததாக (Dock)' சீன விண்வெளி நிறுவனமான சிஎம்எஸ்ஏ தெரிவித்துள்ளது. சென்சோ-22 ஏவுதல் திட்டம் முழுமையான வெற்றியைப் பெற்றதாகவும் சிஎம்எஸ்ஏ (CMSA) கூறியுள்ளது.

சென்சோ விண்கலம் பாதிப்பு

சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட சென்சோ-22 விண்கலம் சென்சோ-20 விண்கலத்தில் ஏற்பட்ட சிக்கல் ஏப்ரல் 24, 2025-ஆம் தேதி, சீனாவின் சென்சோ-20 விண்கலத்தில், சென் தோங் தலைமையில், வாங் ஜீ, சென் ஜோங்ருய் ஆகியோர் அடங்கிய மூவர் குழு, சீனாவின் தியான்கொங் விண்வெளி நிலையத்தை அடைந்தது. சுமார் 200 நாட்களுக்கு மேல் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்து சாதனை படைப்பது இவர்களின் நோக்கமாக இருந்தது.

பழுதுடன் பூமிக்கு வரமுடியாது

ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, நவம்பர் 5-ஆம் தேதி பூமிக்குத் திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்காக நிறுத்தப்பட்டிருந்த சென்சோ-20 விண்கலம் பழுதடைந்தது. குறிப்பாக, விண்கலத்தின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல்கள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

விண்வெளிக் குப்பைகள், வேகமாகப் பாய்ந்து வந்து சென்சோ 20 விண்கலத்தை மோதி சேதப்படுத்தியதாகக் கருதப்படுகிறது. விண்கலத்தின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்படுத்தும் அளவுக்கு பலமான மோதல் ஏற்பட்டு இருந்தால், அதன் தொடர்ச்சியாக விண்கலத்தின் வெப்பப் பாதுகாப்பு அமைப்பையும் அது சேதப்படுத்தி இருக்கலாம் என்ற அச்சமும் எழுந்தது. எனவே, அந்த விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவது சாத்தியமற்றதாகிவிட்டது.

சுழற்சி முறையில் ஆய்வு செய்வார்கள்

இந்தச் சிக்கலின் விளைவாக, தியான்கொங் விண்வெளி நிலையத்தில் மூன்று பேருக்குப் பதிலாக ஆறு பேர் தங்கும் நிலைமை ஏற்பட்டது.பொதுவாக, சீன விண்வெளி நிலையத்தில் மூவர் தங்கி 180 நாட்களுக்கு ஆய்வு செய்வார்கள். 2021 முதலே இத்தகைய சென்சோ விண்வெளி திட்டங்களை சீன விண்வெளி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. மூன்று வீரர்கள் எந்த விண்கலத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்தார்களோ, அதே விண்கலம் தயார் நிலையில் இருக்கும்.

அவசரக்கால சூழ்நிலையில் பூமிக்குத் திரும்புவதற்கான மீட்பு ஊர்தியாகவும் அதே விண்கலம் செயல்படத் தயாராக இருக்கும். இந்த நிலையில், அங்கு தங்கிச் செயல்படும் குழுவின் பணி முடியும் தறுவாயில், புதிய மூவர் பணிக் குழுவினர் வேறொரு விண்கலத்தில் விண்வெளி நிலையத்தைச் சென்றடைவார்கள். புதிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, பழைய குழு தாங்கள் வந்த அதே விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவது வழக்கமான ஒன்றாகும்.

சென்சோ 21 விண்கலத்தை பயன்படுத்தி பூமிக்கு திரும்பினர்

ஆனால், சென்சோ-20 பழுதடைந்ததால், வழக்கமான நடைமுறையைக் கைக்கொள்வது சாத்தியமில்லாமல் போனது. இந்தச் சிக்கலின் விளைவாக, தியான்கொங் விண்வெளி நிலையத்தில் மூன்று பேருக்குப் பதிலாக ஆறு பேர் தங்கும் நிலைமை ஏற்பட்டது. எனவே இதற்குத் தீர்வாக, சமீபத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்த சென்சோ-21 விண்கலத்தைப் பயன்படுத்தி, சென்சோ-20 குழுவை பூமிக்குக் கொண்டு வரலாம் என்று திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டது.

இதன் மூலம் ஒரு விண்கல இணைப்பு மையம் (Docking Port) காலியாகும். அதோடு, விண்வெளி நிலையத்தில் மூவர் மட்டுமே இருப்பார்கள். அடுத்ததாக, ஆளில்லாத நிலையில் சென்சோ-22 விண்கலத்தை ஏவத் திட்டமிடப்பட்டது. இந்த ஆளில்லா சென்சோ-22 விண்கலம், விண்வெளி நிலையத்தில் மீதமுள்ள மூவருக்கான மீட்பு விண்கலமாகச் செயல்படும் என்பதே திட்டம். இதன் விளைவாக, சென் தோங் தலைமையிலான சென்சோ-20 குழு, சென்சோ-21 குழு வந்த விண்கலத்தைப் பயன்படுத்தி, நவம்பர் 14ஆம் தேதி பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.

சென்சோ 22 விண்கலம் வெற்றிகராமாக சென்றடைந்தது

சென்சோ-21இல் சென்ற விண்வெளி வீரர்களான குழுத் தலைவர் சாங் லூ தலைமையில், சாங் ஹோங்க்ஜாங், வூ ஃபெய் ஆகிய மூவர் குழு தற்போது தியான்கொங் விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களது ஆறு மாத பணி என்பது, 2026 ஏப்ரலில் முடிவடையும்.

மனிதர்கள் யாரும் இல்லாமல் விண்ணில் செலுத்தப்பட்ட சென்சோ-22 விண்கலத்தில், மருத்துவப் பொருட்கள், தியான்கொங் விண்வெளி நிலையத்திற்கான உதிரி பாகங்கள் மற்றும் விண்வெளி நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள 'சென்சோ-20' விண்கலத்தின் ஜன்னல் விரிசலை சரிசெய்வதற்கான உபகரணங்கள் அனுப்பப்பட்டன. அது மட்டுமல்லாது, விண்வெளி வீரர்களுக்கான பழங்கள், காய்கறிகள், இறைச்சி உணவுகள் மற்றும் கேக்குகள் அனுப்பப்பட்டுள்ளன.

அவசரமாக ஏவப்பட்டு வெற்றியடைந்த ஆளில்ல விண்கலம்

இதை சீன விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு 'விண்வெளி அவன்' (Oven) மூலம் சமைத்துக் கொள்ள முடியும். இந்த சென்சோ-22 விண்கலம் ஏப்ரல் 2026 வரை சீன விண்வெளி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் என்றும், ஏப்ரல் 2026இல் சென்சோ-21 திட்டத்தின் மூவர் குழுவினரை பூமிக்குக் கொண்டு வர இது பயன்படுத்தப்படும் என்றும் சிஎம்எஸ்ஏ தெரிவித்துள்ளது.

வெறும் 3 வாரங்களுக்குள், சென்சோ-21 விண்வெளி வீரர்களை மீட்பதற்கான ஒரு விண்கலத் திட்டம் உருவாக்கப்பட்டு, அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது, சீன விண்வெளித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. "இத்தகைய அவசரக்கால ஏவுதலை சீனா முதல்முறையாகச் செய்துள்ளது. ஆனால் இது மனித குலத்தின் விண்வெளிப் பயணத்தில் கடைசியாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று சிஎம்எஸ்ஏ அதிகாரி ஹீ யுவான்ஜுன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.