France Supermarket Hack: Old Software Vulnerabilities Suspected in Refrigeration Attack-World Google
உலகம்

பிரான்ஸில் சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களை குறிவைத்த ஹேக்கர்கள்.. 50°C வரை உயர்ந்த வெப்பநிலை!

பிரான்ஸில் 700 சூப்பர் மார்க்கெட்டுகள் பாதிப்பு எனத் தகவல்.. ஃபிரிட்ஜ்களின் வெப்பநிலை 50°C வரை உயர்வு; கெட்டுப்போன உணவுப் பொருட்கள்!

NARENDRAN K

ஃபிரிட்ஜ்களின் வெப்பநிலை 50°C வரை உயர்வு :

பிரான்ஸில் நூற்றுக்கணக்கான சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஃப்ரீசர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹேக்கர்கள் குளிர்சாதன அமைப்புகளின் கட்டுப்பாட்டைப் பெற்று, அவற்றின் வெப்பநிலையை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இறைச்சி, உறைந்த உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை கெட்டுப்போனதுடன், சில கடைகளில் தீ விபத்துகளும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

700 சூப்பர் மார்க்கெட்டுகள் பாதிப்பு :

அக்டோபர் 11ஆம் தேதி இரவு முதல் 12ஆம் தேதி அதிகாலை வரை இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் உள்ள Intermarché, Netto, Carrefour, E.Leclerc, Monoprix மற்றும் Coopérative U உள்ளிட்ட பல்வேறு சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 13ஆம் தேதி பிரான்ஸ் நிதியமைச்சர் ரோலண்ட் லெஸ்கூர் தெரிவித்த தகவலின்படி, நாட்டில் சுமார் 700 சூப்பர் மார்க்கெட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், பாதிக்கப்பட்ட கடைகளின் எண்ணிக்கை குறித்த ஆரம்பகட்ட மதிப்பீடுகள் வெவ்வேறாக வெளியாகியுள்ளன.

ஃபிரிட்ஜ்களைச் சூடாக்கிய ஹேக்கர்கள் :

சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிர்சாதன அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் மென்பொருளுக்குள் ஊடுருவிய ஹேக்கர்கள், அதில் உள்ள தானியங்கி பனிநீக்க (Defrost) வசதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஃபிரிட்ஜ்கள் மற்றும் ஃப்ரீசர்களின் வெப்பநிலை உயர்ந்துள்ளது.

சில இடங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை சென்றதால், உணவுப் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

கெட்டுப்போன உணவுப் பொருட்களை கடை நிர்வாகங்கள் அகற்ற வேண்டிய சூழலும் உருவானது.

பழைய மென்பொருளில் இருந்த பாதுகாப்புக் குறைபாடா?

பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு அமைப்பின் விசாரணையில், டென்மார்க்கைச் சேர்ந்த Danfoss நிறுவனத்தின் குளிர்சாதனக் கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழைய மென்பொருள் மற்றும் புதுப்பிக்கப்படாத பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இணையத்துடன் இணைக்கப்பட்ட தொழில்துறை சாதனங்களில் போதிய பாதுகாப்பு இல்லாவிட்டால், அவற்றைத் தொலைவிலிருந்தே கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

விசாரணையில் பிரான்ஸ் அரசு :

இந்தச் சம்பவம் குறித்து பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் சைபர் குற்றப்பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான ANSSI விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை எந்த ஹேக்கர் குழுவும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை; தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தச் சம்பவம் உணவுப் பாதுகாப்பு மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஒரு நிறுவனத்தின் இணையதளத்தை முடக்குவது மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான இயந்திரங்களைக் கட்டுப்படுத்தி நேரடிப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியும் என்பதை இந்தச் சைபர் தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது.

=================