Amendments made immigration regulations to enable Sri Lankan Tamils to return to the country easily  AI generated
உலகம்

”தமிழர்கள் நாடு திரும்பலாம்” : குடியேற்ற விதிகளை எளிமையாக்கிய இலங்கை : தமிழகத்தில் உள்ள 89,000 பேருக்கு வாய்ப்பு...!

உள்நாட்டு போரின் போது வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கை தமிழர்கள், சட்ட சிக்கல் இன்றி எளிதாக நாடு திரும்பும் வகையில், குடியேற்ற விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Kannan

இலங்கையை விட்டு வெளியேறிய தமிழர்கள்

இலங்கையில் அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டு போரின் போது ஆயிரக் கணக்கானோர் பாஸ்போர்ட் உள்ளிட்ட முறையான பயண ஆவணங்கள் இன்றி நாட்டை விட்டு வெளியேறினர்.

வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம்

இலங்கையில் இருந்து தப்பித்த அவர்கள், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அகதிகளாக குடியேறினர். அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் இலங்கை அகதிகள் 89 ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள்.

இலங்கை திரும்புவதில் சிக்கல்

உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து, இலங்கையில் அமைதி திரும்பி விட்டாலும், வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் இருந்தது.

நாடு திரும்ப பல்வேறு சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களிடம் முறையான பாஸ்போர், விசா கிடையாது. எதற்காக நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்பது தொடர்பான ஆவணங்களும் இலங்கை வசம் இல்லை.

குடியேற்ற விதிகளில் தளர்வு

இந்தச்சூழலில் இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை எளிதாக்க புதிய குடியேற்ற நடைமுறைக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். இலங்கை அகதிகள் எதிர்கொள்ளும் சட்ட சிக்கல்களை நீக்குவதை நோக்கமாக கொண்டதாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டு இல்லை என்றால் தடையில்லை

புதிய நடைமுறையின்படி, மே 19, 2009க்கு முன் நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கை மக்கள், கொலை, தேச துரோகம் அல்லது பிற குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகவில்லை என்பதை உறுதிப்படுத்த இலங்கை அரசின் உளவுத்துறையால் பரிசோதிக்கப்படுவார்கள்.

தற்காலிக பாஸ்போர்ட்

இதில் தகுதி பெறுபவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாமல், தற்காலிக பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் 89,000 பேர்

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையின் உதவியுடன் 2002 முதல் 2022 வரையிலும் இந்தியாவிலிருந்து 18,000 இலங்கை அகதிகள் தாமாக தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

2026 நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு உள்ளேயும், வெளியேயும் சுமார் 89,000 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

குடியேற்ற விதிகளில் இலங்கை அரசு கொண்டு வந்திருக்கும் தளர்வு இவர்கள் தாயகம் திரும்ப எளிதாக இருக்கும் எனத் தெரிகிறது.

====================