Australian MP Jordan Lane Marriage Proposal Parliament Speech source: google, jordanlaneryde
உலகம்

நாடாளுமன்றத்தில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த ஆஸ்திரேலிய எம்.பி. ஜோர்டான் லேன் : வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தனது இறுதி உரையை நிகழ்த்திய ரைட் தொகுதி எம்.பி. ஜோர்டான் லேன், சக உறுப்பினர்கள் முன்னிலையில் தனது காதலி நடாலிக்கு திருமண ப்ரொபோசல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Kavitha prasanna

Australian MP Jordan Lane Marriage Proposal Parliament Speech

நாடாளுமன்றத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய காதல் ப்ரொபோசல்

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ரைட் (Ryde) தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்து வரும் எம்.பி. ஜோர்டான் லேன் (Jordan Lane), கடந்த 19ஆம் தேதி ஆற்றிய தனது இறுதி உரையின் போது தனது காதலி நடாலியிடம் திருமண விருப்பத்தைத் தெரிவித்து ஒட்டுமொத்த அவையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தொகுதியை நேசிக்கிறேன்... ஆனால் அதைவிட...

சபாநாயகரின் அனுமதியுடன் தனது பிரியாவிடை உரையை (Valedictory Speech) நிகழ்த்திய ஜோர்டான் லேன், காதல், குடும்பம், மக்கள் சேவை மற்றும் தான் எடுக்கப் போகும் முக்கிய முடிவு குறித்துப் பேசிவிட்டு, இறுதியில் நடாலியிடம் திருமணக் கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த நெகிழ்ச்சியான வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "இன்று நாடாளுமன்றத்தில் எனது இறுதி உரையை நிகழ்த்தினேன். நான் ரைட் தொகுதியை எப்போதும் நேசிக்கிறேன்; ஆனால் அதைவிட அதிகமாக நடாலியை நேசிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

உணர்ச்சிப்பூர்வமான உரை

தனது உரையைத் தொடங்கிய ஜோர்டான் லேன், காதலும் அரசியலும் தன்னை எப்படி வடிவமைத்தன என்பதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், "நான் எந்த அரசியல் குடும்பத்திலிருந்தும் வரவில்லை.

முக்கால் நூற்றாண்டு காலத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்காக ரைட் தொகுதி மக்கள் ஒரு புதிய எம்.பி-யைத் தேர்ந்தெடுத்தது இதுவே முதல்முறை" என தனது தேர்தல் வெற்றியை நினைவுகூர்ந்தார்.

குடும்பத்தினருக்கு நன்றி

நேர்மை, கடின உழைப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றை கற்றுக் கொடுத்த பெற்றோர் ஜானெல் மற்றும் ரிச்சர்ட், சகோதரிகள் கெண்டல் மற்றும் மேடிசன், பாட்டி ஜூன் மற்றும் லில்லி, ஆஸ்கர் ஆகியோரின் ஆதரவிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தனது வாழ்நாள் முழுவதும் வசித்த ரைட் பகுதி எப்போதும் தனது வீடாகவும், அதன் மக்கள் தனது குடும்பமாகவும் இருப்பார்கள் என்றும் கூறினார்.

'என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?' - சபையில் நெகிழ்ச்சி

பல தடைகளைத் தாண்டி நிலைத்திருக்கும் தங்களது காதலைப் பற்றி பேசிய ஜோர்டான் லேன், தனது வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நல்ல மற்றும் உண்மையான விஷயங்களுக்கும் நடாலியே காரணம் என்று நெகிழ்ந்தார்.

உரையின் இறுதியில், "சில நேரங்களில் வார்த்தைகளை விடச் செயல்களே அதிகம் பேசும். சபாநாயகர் அவர்களே, ரைட் தொகுதி உறுப்பினராக எனது இறுதிக் கேள்வியை எனது பேரன்பான நடாலியிடம் கேட்க விரும்புகிறேன். என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?" எனக் கேட்டார். இதற்கு நடாலி புன்னகையுடன் தலையசைத்து சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சக உறுப்பினர்கள் கைதட்டித் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

================