பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன் வெள்ளிக்கிழமை டெல்லி வந்தடைந்தார்.
இந்திய பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து இருதரப்பு உறவுகள், மேற்கு ஆசிய நிலவரம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
டெல்லி வந்தடைந்த உடனேயே, பிரிக்ஸ் வணிக மன்ற (BRICS Business Forum) நிகழ்ச்சியில் ஈரான் அதிபர் பங்கேற்றார்.
இதில் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்தும் நோக்கில், உறுப்புநாடுகள் தங்களது உள்ளூர் நாணயங்களில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
மேலும், நாடுகளின் கட்டண முறைகளை ஒன்றோடொன்று இணைத்து, எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை வேகமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பிரிக்ஸ் வணிக மன்றத்தில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தை, உற்பத்தித் திறன், டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் திறமையான மனிதவளம் ஆகியவை பிரிக்ஸ் பொருளாதார ஒத்துழைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று தெரிவித்தார்.
செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேற்கு ஆசிய நிலவரம், உலக பொருளாதாரம், உள்ளூர் நாணய வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
=================