உச்சத்தில் தங்கம் விலை
China Central Bank Gold Buying Reserves 2025 : உலகம் முழுவதுமே தங்கம் விலை வரலாறு காணாத உச்சங்களை எட்டி வருகிறது. சென்னையில் இன்றைய தினம், ஒரு சவரன் ஆபரண தங்கம் 90 ஆயிரம் ரூபாயை கடந்து விட்டது . ஒரு சவரன் நகை வாங்க வேண்டும் என்றால், செய்கூலி, சேதாரத்துடன் சேர்த்து நாம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தர வேண்டி இருக்கும். தீபாவளிக்குள் சவரன் விலை 1 லட்சத்தை எட்டி விடுமோ என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.
தங்க கையிருப்பில் போட்டா போட்டி
தங்கம் விலை உயர்வு என்பது சர்வதேச நாடுகளின் அரசியலோடு தொடர்புடைய விஷயம். ஒரு சாதாரண குடும்பத்திற்கு தங்கம் எப்படி, அந்தஸ்தை பெற்றுத் தருகிறதோ, அதேபோன்று, உலக நாடுகளுக்கு இடையிலும் தங்க கையிருப்பு போட்டி இருக்கிறது. எந்த நாடு அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கிறதோ அந்த நாடுதான் எதிர்காலத்தில் உலகின் சக்தி வாய்ந்த நாடாக இருக்கும் என்ற எண்ணம் அனைத்து நாடுகளின் மத்தியிலும் நிலவுகிறது.
உலக ஆளும் அமெரிக்க டாலர்
உலக அளவில் அமெரிக்க டாலர் வலிமையான நாணயமாக இன்று வரை நீடித்து வருகிறது. எந்த நாடும் சர்வதேச சந்தையில் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலும் அமெரிக்க டாலரில் தான் அதை வாங்க வேண்டி இருக்கிறது. டாலரின் வலிமையே அமெரிக்கா உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது இந்த சூழலில் தான் டாலரின் மதிப்பை இழக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கி இருக்கிறது சீனா.
தங்கத்தை குவிக்கும் சீனா
இதன் காரணமாக ஏதாவது பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ள கைவசம் தங்கம் இருந்தால் அசைக்க முடியாது என்பதில் மிக வலுவாக கவனம் செலுத்துகிறது. இதற்காக சீன மத்திய வங்கி தங்கத்தை வாங்கி குவித்து வைக்கிறது. தொடர்ந்து 11 மாதங்களாக சீன மத்திய வங்கி தங்களால் இயன்ற அளவு அதிக அளவில் தங்கத்தை வாங்கி இருக்கிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் சீனா கைவசம் இருந்த தங்கத்தின் மதிப்பு 253.84 பில்லியன் டாலர்கள் அதுவே செப்டம்பர் மாத இறுதியில் 283.29 பில்லியன் டாலர்கள்.இதோடு சீனா நிற்கப் போவதில்லை. வரும் மாதங்களிலும் தங்கத்தை மலைபோல தங்கத்தை வாங்கி குவிக்கத் தான் போகிறது.
மேலும் படிக்க : தங்கத்தை குவிக்கும் நாடுகள் : இந்தியாவின் கையிருப்பு 879.98 டன்
விலையேற்றம் தொடரும், நிற்காது
இதன்பாதிப்பு உலக அளவில் தொடர்ந்து எதிரொலிக்கும். தங்கம் விலையேற்றம் இனி குறையவே குறையாது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தங்களின் தங்க இருப்பை அதிகரித்து விட்டு டாலர் இருப்பை குறைக்கும் என உலக தங்க கவுன்சில் அடித்துக் கூறுகிறது. அனைத்து நாடுகளும் தங்க முதலீட்டை அதிகரித்தால், இனி அதன் விலை குறைய வாய்ப்பே இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
=============