முன்னேறும் ஜனநாயக கட்சி
அமெரிக்காவில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ச்சியாக எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
டிரம்பின் குடியரசு கட்சிக்கு பின்னடைவு
அதிபர் டொனால்டு டிரம்பின் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை கிடைக்க விட்டால், எந்த முக்கிய மசோதாவையும் டிரம்பால் நிறைவேற்ற முடியாது.
ஓஹியோ ஆளுநர் தேர்தல்
நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இதில் ஓஹியோ (Ohio) மாநிலத்தின் ஆளுநர் பதவிக்கு நடைபெற்ற தேர்தல் முடிவு குடியரசுக் கட்சிக்கு ஒரு பெரிய பின்டைவாக அமைந்துள்ளது.
விவேக் ராமசாமி தோல்வி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல குடியரசுக் கட்சித் தலைவரும் தொழிலதிபருமான விவேக் ராமசாமி (Vivek Ramaswamy) இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஏமி ஆக்டனிடம் (Amy Acton) தோல்வியைச் சந்தித்துள்ளார்.
குடியரசு கட்சியின் கோட்டை ஓஹியோ
குடியரசுக் கட்சியின் வலுவான கோட்டையாகக் கருதப்படும் ஓஹியோ மாகாணத்தில், இம்முறை நடைபெற்ற ஆளுநர் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஏமி ஆக்டன் சுமார் 50.4 சதவீத வாக்குகள் முன்னிலை வகித்து, தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட விவேக் ராமசுவாமி 46.3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
முதல் பெண் ஆளுநர்
இரண்டு தசாப்தங்களாகக் குடியரசுக் கட்சியின் வசம் இருந்த ஓஹியோ ஆளுநர் பதவியை ஜனநாயகக் கட்சி தற்போது கைப்பற்றியுள்ளதுடன், மாநில வரலாற்றில் முதல்முறையாகப் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் ஏமி ஆக்டன் பெற்றுள்ளார்.
வேட்பாளர்களின் தனித்துவமான பிரச்சாரம்
இத்தேர்தலில் களமிறங்கிய இரு முக்கிய வேட்பாளர்களும் தங்களது தனித்துவமான பிரச்சாரங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர்.
ஜனநாயக கட்சி - ஏமி ஆக்டன்
மருத்துவராகவும், ஓஹியோ சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஏமி ஆக்டன், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பொருளாதாரச் சீரமைப்பை மையமாகக் கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
குடியரசு கட்சி - விவேக் ராமசாமி
விவேக் ராமசாமி (Vivek Ramaswamy) அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இந்திய வம்சாவளி தொழிலதிபர், அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.
யார் இந்த விவேக் ராமசாமி?
'ரோய்வண்ட் சயின்சஸ்' (Roivant Sciences) என்ற பயோடெக்னாலஜி மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
'ஸ்ட்ரைவ் அசெட் மேனேஜ்மென்ட்' (Strive Asset Management) நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருந்துள்ளார்.
இவர் எழுதிய "Woke, Inc." மற்றும் "Nation of Victims" ஆகிய புத்தகங்கள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானவை.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர், அமெரிக்க அரசியலில் தீவிரமாக இயங்கி வருபவர்.
2024ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் முதற்கட்டப் பிரைமரி தேர்தலில் போட்டியிட்டு கவனம் ஈர்த்தார்.
ஓஹியோ தேர்தல் - 100 மில்லியன் டாலர் செலவு
அமெரிக்க இடைத்தேர்தல்களில் ஓஹியோ ஆளுநர் களம் மிக அதிக செலவுகள் செய்யப்பட்ட தொகுதிகளில் ஒன்றாக பெயர் பெற்றது.
அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, இத்தேர்தலுக்கான ஒட்டுமொத்தப் பிரச்சாரச் செலவுகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியிருந்தது.
குடியரசு கட்சியை விரட்டிய ஜனநாயக கட்சி
நீண்ட காலமாகக் குடியரசுக் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்த மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது, வரவிருக்கும் தேசிய அரசியலிலும் அமெரிக்காவின் எதிர்காலக் கொள்கை முடிவுகளிலும் ஆழமான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
=================