மொரோக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமர் :
மொராக்கோ நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மொராக்கோ மன்னர் முகமது VI, பாத்திமா எஸ்ஸாஹ்ரா எல் மன்சூரியை (Fatima Ezzahra El Mansouri) நாட்டின் புதிய பிரதமராக நியமித்துள்ளார்.
இதன் மூலம் மொராக்கோவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாத்திமா எல் மன்சூரி தலைமையிலான ஆத்தென்டிசிட்டி அண்ட் மாடர்னிட்டி கட்சி (PAM) அதிக இடங்களை வென்று முதலிடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, அரசியலமைப்பு விதிகளின்படி அவரை பிரதமராக நியமித்து மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
50 வயதான பாத்திமா எல் மன்சூரி வழக்கறிஞராகவும், அரசியல்வாதியாகவும் அறியப்படுகிறார்.
மராக்கெஷ் நகரின் மேயராகவும், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
மொராக்கோ அரசியலில் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
தேர்தலில் அவரது கட்சி அதிக இடங்களை வென்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மையை பெறவில்லை.
இதனால் பிற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசை அமைக்கும் பொறுப்பு தற்போது பாத்திமா எல் மன்சூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி நியமிக்கப்பட்டிருப்பது, அந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
மேலும், 2030 கால்பந்து உலகக் கோப்பை போட்டிக்கான தயாரிப்புகள், பணவீக்கம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல முக்கிய சவால்களை அவரது அரசு எதிர்கொள்ள உள்ளது.
மேயராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் :
2009-ஆம் ஆண்டு வெறும் 33 வயதில் மராக்கெஷ் (Marrakech) நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திமா எஸ்ஸாஹ்ரா எல் மன்சூரி, அந்த நகரின் முதல் பெண் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.
2009 முதல் 2015 வரை மேயராகப் பணியாற்றிய அவர், 2021-ஆம் ஆண்டில் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வழக்கறிஞரான அவர், பின்னர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
==================