நான்கு ஆண்டுகால நீடிக்கும் போர் :
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அந்த போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தற்போது தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதுவரை அமைதி மற்றும் பேச்சுவார்த்தையை மட்டுமே வலியுறுத்தி வந்த இந்தியா, தற்போது நேரடியாக இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, போருக்கு முடிவு காணும் முயற்சியில் இறங்கியுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக கருங்கடல் பகுதியில் தானியங்கள், எரிபொருள் மற்றும் சரக்கு கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்து, எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை தவிர்ப்பது உள்ளிட்ட விஷயங்களில் இந்தியா ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, பல நாடுகள் வழங்கிய நான்கு அமைதி திட்டங்களில் இந்தியாவின் திட்டம்தான் மிகவும் விரிவானதும் முழுமையானதும் என பாராட்டியுள்ளார்.
கருங்கடலில் எரிசக்தி மற்றும் வேளாண் துறைக்கான போர்நிறுத்தம், எரிசக்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பதுபோன்ற அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக கூறியுள்ளார்.
மேலும், போரை முடிவுக்கு கொண்டுவர மோடியிடம் நல்ல யோசனைகள் இருப்பதாகவும், இந்தியாவின் முயற்சிகளுக்கு ரஷ்யா நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இது போர் காலம் அல்ல" என்ற தனது பழைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி வரும் பிரதமர் மோடி, எந்த பிரச்சினைக்கும் தீர்வு போர்க்களத்தில் கிடைக்காது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமே நிரந்தர அமைதி சாத்தியம் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்தியா அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
=====================