India has strongly condemned reports that a 100-year-old Hindu temple in Pakistan's Narowal district Google
உலகம்

நூற்றாண்டு பழமையான இந்து கோவில் பாகிஸ்தானில் இடிப்பு : இந்தியா கடும் கண்டனம்...

பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தில் அமைந்திருந்த 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் இடிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து, வெளிப்படையான விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது...

NARENDRAN K

என்ன நடந்தது?

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து கோவில் இடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

சுமார் 100 முதல் 125 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது

மதரஸா விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்டதா?

உள்ளூர் சிறுபான்மை அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள், அருகில் உள்ள மதரஸா விரிவாக்கத்திற்காக கோவில் திட்டமிட்டு இடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளன.

மேலும், கோவிலின் கட்டுமானப் பொருட்கள் மற்றும் செங்கற்களும் அகற்றப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் அரசின் விளக்கம் :

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாகிஸ்தான் அதிகாரிகள், கனமழை மற்றும் கட்டிடத்தின் பழமை காரணமாகவே கோவில் இடிந்து விழுந்ததாக விளக்கம் அளித்துள்ளனர்.

கோவில் அமைந்திருந்த நிலம் யாருக்கும் குத்தகைக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் கடும் கண்டனம் :

இந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கவலை தெரிவித்தார்.

சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சம்பவம் குறித்து விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச கவனம் ஈர்த்த சம்பவம்:

இந்த சம்பவம் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

================