Russia on India-US trade agreement : உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள இந்தியாவிற்கு முழு சுதந்திரம் உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் வரியானது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ செய்தி
இதுதொடர்பாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ”ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது” என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் இறுதி செய்துள்ளார். இதற்காக இந்திய பிரதமர் மோடியுடன் நேரடியாகவே பேசியுள்ளார். இந்தியா அமெரிக்கா இடையிலான இந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம்
அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், 140 கோடி இந்தியர்களின் எரிசக்கி பாதுகாப்பை உறுதி செய்வதுதான் எப்போதும் அரசின் உயர் முன்னுரிமையாக இருக்கும் . இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் சந்தை நிலவரமும் சர்வதேச சூழலும் தான் நமது அடிப்படை உத்தியாக உள்ளது.
இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளும் இதை கருத்தில் கொண்டுதான் எடுக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யா வெளியிட்ட செய்தி
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியா இனிமேல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்காது என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசியுள்ளார்.
டிமிட்ரி பெஸ்கோவ் கூறியிருப்பதாவது
ரஷ்யா தனியொரு தேசமாக கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை இந்தியாவிற்கு விநியோகிக்கவில்லை. இது சர்வதேச நாடுகளுக்கு நன்கு தெரியும்.
மேலும் இந்தியா ஏற்கெனவே பல்வேறு சர்வதேச நாடுகளிடையே கச்சா எண்னெய் வாங்கி வருகிறது. அதில் புதிது எதுவும் இல்லை என்று நாங்கள் பார்க்கிறோம்.
அதனால் உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள இந்தியாவிற்கு முழு சுதந்திரம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
====