India Womens Squad for ICC Women's World Cup 2025 : மகளிர் உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோத உள்ளதை அடுத்து அலிசா ஹீலி தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் அனைத்திலும் திடமான ஒரு அணியாக வலம் வருகிறது.
இந்தியா - இலங்கை :
13-வது பெண்கள் உலகக் கோப்பை(ICC Womens World Cup) கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன(India vs Sri Lanka Match). பங்கேற்கும் 8 அணிகளில் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருப்பது யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய அணியின் பலம் :
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் அனைத்திலும் பலமான ஒரு அணியாக வலம் வருகிறது. தொடர் 7 வெற்றிகளை தழுவிய ஆஸ்திரேலியா 8 வது முறை தழுவுமா. 2024-ம் ஆண்டில் இருந்து 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 16-ல் வெற்றி கண்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதில் டெல்லியில் நடந்த ஆட்டத்தில் 412 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கேப்டன் ஹீலியுடன் எலிஸ் பெர்ரி, பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், ஜார்ஜியா வோல், லிட்ச்பீல்டு, மேகன் ஸ்கட், சுதர்லாண்ட் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே ஆஸ்திரேலிய அணியில் அணிவகுத்து நிற்கிறார்கள். எனவே கோப்பையை தட்டி செல்லும் வாய்ப்பு மிகுதியாக ஆஸ்திரேலியாவிற்கே மளிருகிறது.
இந்திய அணியில் ஜொலிக்கும் வீரர்கள் :
இந்தியா: சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு அனுகூலமாகும்(India Squad for ICC Womens World Cup 2025). இதுவரை எந்த உலகக் கோப்பையும் வெல்லாத இந்தியா இந்த முறை இறுதிதடையை வெற்றிகரமாக உடைப்போம் என கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை அளித்துள்ளார். 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது மிகப்பெரிய துணிச்சலாகும். உலகின் 'நம்பர் ஒன்' பேட்டரான ஸ்மிர்தி மந்தனாவைத் தான் இந்திய அணி மலைபோல் நம்பி உள்ளது என்றாலும் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 50 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தார். 2025-ம் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் (928 ரன்) முதலிடம் வகிக்கிறார்.
சிறந்த பேட்டிங் வீரங்கானை மந்தனாவுடன், 5-வது முறையாக உலகக் கோப்பையில் கால்பதிக்கும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், ரேணுகா சிங், சினே ராணா, கிரந்தி கவுட் உள்ளிட்டோர் நெருக்கடியை எளிமையாக கையாண்டு விரைவில் கோப்பையை தன் வசம் வைப்பார்கள் என்று இந்திய ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து வீரர்கள் :
இங்கிலாந்து: 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி நாட் சிவெர் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. ஆல்-ரவுண்டரான நாட் சிவெர் தான் அந்த அணியின் முதுகெலும்பு. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பையை அந்த அணி உச்சிமுகர்ந்த போது, அந்த தொடரில் 2 சதங்கள் அடித்தார். 2022-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற போது கூட அதிலும் செஞ்சுரி கண்டார். அண்மை கால தடுமாற்றத்தை சமாளித்து இங்கிலாந்து மீண்டெழுவதற்கு அவர் கைகொடுக்க வேண்டியது அவசியமாகும். மற்றபடி சோபி எக்லெஸ்டோன், சார்லி டீன், டாமி பீமோன்ட், டேனி வியாட், விக்கெட் கீப்பர் அமெ ஜோன்ஸ், ஹீதர் நைட், அலிஸ் கேப்சி நம்பிக்கை அளிக்கிறார்கள்.
கைப்பற்றுமா நியூசிலாந்து :
நியூசிலாந்து: கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை சொந்தமாக்கிய நியூசிலாந்து, இப்போது 50 ஓவர் உலகக் கோப்பைக்கு குறி வைத்துள்ளது. சுசி பேட்ஸ், லியா தஹூதஹூ, அமெலியா கெர், மேடி கிரீன், ஜார்ஜியா பிளிமெர் ஆகியவர்கள் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். கடந்த 6 மாதங்களாக நியூசிலாந்து எந்த ஒரு நாள் போட்டியிலும் விளையாடவில்லை என்றாலும். கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள சூழலுக்கு ஏற்ப பழக்கப்படுத்திக் கொள்ள 2 வாரம் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டனர். எப்படியும் அவர்கள் டாப்-4 அணிக்குள் ஒன்றாக அரைஇறுதியை எட்டி விடுவார்கள் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
தென்ஆப்பிரிக்காவின் சபதம் :
தென்ஆப்பிரிக்கா: கடந்த இரு உலகக் கோப்பை தொடர்களில் அரைஇறுதிக்கு வந்திருந்த தென்ஆப்பிரிக்கா இந்த முறை இறுதி சுற்று வரை சென்று வென்று காட்டுவோம் என்று கூறியுள்ளது. இந்த தடவை தாங்கள் மிகவும் வலுவான அணியாக இருப்பதாக கேப்டன் லாரா வோல்வார்ட் கூறுகிறார். அவருடன், 'ஹாட்ரிக்' சதம் அடித்துள்ள தஸ்மின் பிரிட்ஸ், நடினே டி கிளெர்க், மரிஜானே காப் ஆகியோர் அந்த அணியின் கவனிக்கத்தக்க வீராங்கனைகளாக உள்ளனர். இவர்கள் தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்துவது பொறுத்தே தென்ஆப்பிரிக்காவின் வெற்றி தெரியவரும்.
மேலும் படிக்க : கோப்பையை மறுத்து கொண்டாட்டத்தில் இந்திய வீரர்கள்- இதல்லவா வெற்றி!
இதில் சொந்த மண்ணில் பெரும்பாலான ஆட்டங்களில் விளையாடும் சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.