ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் பிரச்னை
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரானுக்கு பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாக கூறி இருநாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஈரானின் எண்ணெய் வளம், உச்சபட்ச தலைவர் கமேனியின் செல்வாக்கு, தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி என ஈரானை ஒடுக்க சமயம் பார்த்து காத்திருந்தன.
ஈரான் மீது போர்
பிப்ரவரி 28 ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின. ஈரானும் பதிலடி கொடுக்க பெரிய போராக இது மாறியது.
ஈரான் பதிலடி
வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள், அவற்றின் நட்பு நாடுகளை நோக்கி தாக்கி ஈரான் பதிலடி கொடுத்தது.
கச்சா எண்ணெய் சப்ளை முடக்கம்
இந்தப் போரில் ஈரான் கடுமையான இழப்பை சந்தித்து இருக்கிறது. கோபத்தின் வெளிப்பாடாக ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஈரான், உலக அளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறைக்கு வழி வகுத்து இருக்கிறது.
தற்காலிக போர் நிறுத்தம்
இந்தியா, சீனா போன்ற நட்பு நாடுகளின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி அளித்து வருகிறது. இந்தப்போர் கடந்த மாதம் 7ம் தேதி தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும், மூன்று நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது.
கமேனி கொல்லப்பட்டார்
அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து நடத்திய முதல் நாள் தாக்குதலிலேய ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அமைச்சர்கள், படைத் தளபதிகளையும் ஈரான் இழந்து விட்டது.
பழிவாங்க துடிக்கும் ஈரான்
போர்க்கப்பல்கள் உள்பட ஏராளமான சேதத்தை ஈரான் சந்தித்துள்ளது. இதனால் எப்படியாவது அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்ற முனைப்பில் ஈரான் உள்ளது.
டிரம்ப், நெதன்யாகு தலைக்கு பரிசு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை கொல்பவர்களுக்கு மிகப்பெரிய பரிசு வழங்கப்படும் என்று ஈரான் அறிவித்து இருக்கிறது. இந்த அதிரடி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
ரூ.560 கோடி பரிசு
அதாவது, இருவரின் தலைக்கும் 560 கோடி பரிசித்தொகை வழங்கப்படும் எனக் கூறி இருக்கும் ஈரான், நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதா
58 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.558.87 கோடி) பரிசுத் தொகையை அறிவிப்பதற்கான மசோதாவை ஈரான் தயார் செய்துள்ளது.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இரு தலைவர்களை கொல்வோருக்கு வெகுமதி வழங்க இந்த மசோதா இடமளிக்கிறது.
இந்த மசோதா ஈரான் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கை
இதன்மூலம் டிரம்ப் - நெதன்யாகு ஆகியோரை கொல்ல ஈரான் முழுவீச்சில் தயாராகி வருவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது.
ஈரானின் இந்தத் திட்டம் இருநாடுகளையும் இன்னும் கோபப்படுத்தி இருக்கும். இதனால் விரைவில் மீண்டும் ஈரான் - இஸ்ரேல், ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வெடிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
===============