Iran closure Strait of Hormuz due to war has led global shortage of crude oil and risk of economic collapse google
உலகம்

Strait of Hormuz | உலக பொருளாதாரத்தை அசைக்கும் ஹார்முஸ் நீரிணை : ஈரான் முடிவால் இந்தியா, சீனா பாதிப்பு!

போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஈரான் மூடியதால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுட்டு, பொருளாதாரம் முடங்கும் அபாயம் எழுந்து உள்ளது.

Kannan

ஈரானை சிதைக்கும் இஸ்ரேல் படைகள்

Shutdown of Hormuz Strait by Iran, raises fears of soaring oil prices world wide : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது 3ம் உலகப் போருக்கு வழி வகுக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

ஈரான் உச்சபட்ச தலைவரான அயதுல்லா கமேனி கொல்லப்பட்டது, அந்நாட்டு ராணுவத்தை கொந்தளிக்க செய்து இருக்கிறது.

பதிலடி கொடுத்து, பழிவாங்கும் ஈரான்

அதற்கு பழிவாங்கும் வகையில், அமெரிக்கா ஆதரவு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், குவைத், பஹ்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியது.

மேலும், இஸ்ரேல் தலைநகரில் உள்ள பிரதமரின் அலுவலகம் மீதும், அமெரிக்க, இங்கிலாந்து கடற்படை தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் தொடுத்துள்ளது.

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.

ஹார்முஸ் நீரிணை மூடல்

இதன் ஒருபகுதியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி வைத்துள்ளது. அந்த வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரானின் IRGC பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பாதை வழியாக எந்த கப்பலும் செல்ல அனுமதியில்லை.

காத்திருக்கும் எண்ணெய் கப்பல்கள்

ஓமன் கடற்கரை பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று தாக்கப்பட்டிருப்பது, போரின் தீவிரத்தை காட்டுகிறது. ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் நங்கூரமிட்டு காத்திருக்கின்றன.

ஹார்முஸ் நீரிணை அவ்வளவு முக்கியமா?

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த நீர்ச்சந்தி, உலக எரிசக்தி தேவையின் இதயமாகக் கருதப்படுகிறது.

இதன் அகலம் மிகக் குறுக்கியதாக இருக்கும். கப்பல்கள் செல்லும் பாதை வெறும் 3 கி.மீ மட்டுமே.

20 மில்லியன் பீப்பாய் எண்ணெய்

இவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் ஹார்முஸ் நீரிணை வழியாக நாள்தோறும் 20 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் பிரமாண்ட சரக்கு கப்பல்கள் மூலம் வர்த்தகம் நடைபெறுகிறது.

உலக வர்த்தகத்தில் 20% பங்கு

இது உலக வர்த்தகத்தில் 1/5 பங்கு ஆகும். உலகின் 20% திரவ இயற்கை எரிவாயு இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

சவுதி அரேபியா, ஈராக், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் எடுத்து செல்ல ஹார்முஸ் நீரிணை முக்கிய பங்கு வகிக்கிறது.

உச்சம் தொடும் எண்ணெய் விலை

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானின் நடவடிக்கை, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்கடங்காமல் உயர்த்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 100 டாலரை தாண்டினால், சிறிய நாடுகள் பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூட வேண்டியது தான்.

இந்தியாவுக்கு பாதிப்பு

ஹார்முஸ் நீரிணை பாதை வழியாகச் செல்லும் 84% எண்ணெய் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே, இந்தியாவிலும் எரிபொருள் விலை கணிசமாக உயரும் அபாயம் எழுந்துள்ளது.

உலக பொருளாதாரம் முடங்கும்

இது விலை உயர்வோடு நிற்காது, உலகப் பொருளாதாரத்தையே அசைத்து, நிலைகுலையச் செய்யும். எரிசக்தி விநியோகம் தடைப்பட்டால், தொழிற்சாலைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டு உலகப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கித் தள்ளப்படும்.

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தான் இறுதி முடிவினை எடுக்க முடியும். ஹார்முஸ் நீரிணைக்கு இணையாக கச்சா எண்ணெய் கொண்டு செல்ல வேறு பாதை கிடையாது என்பதால், உலக நாடுகளுக்கு பெரிய சவால் காத்துக் கிடக்கிறது.

==================