அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது ராணுவத் தாக்குதல்களை தொடங்கிய நிலையில், இந்த போருக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணையில் பேசிய பென்டகனின் துணை நிதிக் கட்டுப்பாட்டாளர் ஆர்தர் மில்லர், நவம்பர் 13ஆம் தேதி நிலவரப்படி ஈரான் போருக்காக அமெரிக்கா 48.3 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த 48.3 பில்லியன் டாலர் செலவில் பல்வேறு வகையான செலவுகள் அடங்கியுள்ளன.
குறிப்பாக, போரில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளுக்கான செலவுகள், சேதமடைந்த ராணுவ உபகரணங்களை மீண்டும் வாங்குவதற்கான செலவுகள், ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான செலவுகள் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
முன்னதாக, ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவரப்படி ஈரான் போருக்காக அமெரிக்கா 38 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் (CBO) மதிப்பிட்டிருந்தது.
ராணுவ தளங்களின் சேதம்.. கணக்கில் வராத செலவு :
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கான செலவு இந்த 48.3 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சேர்க்கப்படவில்லை.
அமெரிக்க ராணுவத் தளங்களில் உள்ள விமானக் கொட்டகைகள், கண்காணிப்பு அமைப்புகள், கிடங்குகள் மற்றும் வீரர்கள் தங்கும் இடங்கள் உள்ளிட்டவை தாக்குதல்களில் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் போர் அமெரிக்காவின் ராணுவ செலவுகளை மட்டுமல்லாமல், சர்வதேசப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
========