காசாவில் அமைதி திரும்பியது
Israel Hamas War Ceasefire Update in Tamil : இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சண்டை ஓய்ந்து இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் காரணமாக இது சாத்தியமாகி இருக்கிறது. அமெரிக்கா முன்வைத்த 20 அம்ச திட்டத்தை இஸ்ரேலும், ஹமாசும் ஏற்றுக் கொண்டன. இதன் காரணமாக காசாவில் அமைதி திரும்ப தொடங்கி விட்டது.
பிணைக் கைதிகள் முழுமையாக விடுவிப்பு
2023ல் ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் பிணைக்கைதிகளாக இஸ்ரேலியர்கள் பிடிக்கப்பட்டனர். அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஏற்கனவே, அறிவித்தபடி பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவித்து இருக்கிறது. இதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் (ICRC) உறுதிப்படுத்தியுள்ளது.
காசாவில் போர்நிறுத்தம் அமல்
காசா பகுதியில் போர் நிறுத்தமும் அமலுக்கு வந்திருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தி விட்ட நிலையில், மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைப்பது படிப்படியாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு குண்டு சத்தம் ஓய்ந்து, காசா மக்கள் தைரியத்துடன வீடுகளை விட்டு வெளியே வரத் தொடங்கி இருக்கிறார்கள். அப்பகுதியில் உருக்குலைந்து போயுள்ள பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுமா? என்பது இனிமேல் தான் தெரிய வரும்.
பிணைக் கைதிகள் விடுவிப்பு - ஐநா வரவேற்பு
இதனை வரவேற்றுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ், “காசாவில் இருந்து இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை நான் வெகுவாக வரவேற்கிறேன். அவர்கள் விடுதையானதையும், தத்தம் அன்புக்குரியவர்களுடன் இணையப் போவதையும் நான் வரவேற்கிறேன். மிகுந்த துன்பத்தை அனுபவித்துவிட்டு அவர்கள் திரும்புகிறார்கள்.
அதேபோல், உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும் என்பதை இத்தருணத்தில் நான் வலியுறுத்துகிறேன். இந்தப் போரை நிறுத்துவதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், அடுத்த நகர்வுகளை வேகமெடுக்கச் செய்ய வேண்டும். ஐ.நா., காசா துயரத்தை, அதன் மக்களின் பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர உறுதுணையாக இருக்கும்.” என்றார்.
மேலும் படிக்க : காசாவில் போர் நிறுத்தம் அமல்: இஸ்ரேல் படைகள் வாபஸ், மக்கள் நிம்மதி
காசா உச்சி மாநாடு
இதற்கிடையில் காசா உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் மகமுது அப்பாஸ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உள்ளிட்ட 20 உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் காசாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
============