வானியல் அதிசயங்கள்
வானில் நிகழும் அதிசயங்களில் ஒன்று சூரிய கிரகணம். மற்றொன்று சந்திர கிரகணம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் கடந்து செல்லும்போது, சூரியனின் ஒட்டுமொத்த ஒளியையும் மறைத்து நிழலை ஏற்படுத்துவதே முழு சூரிய கிரகணமாகும்.
ஆக. 12 முழு சூரிய கிரகணம்
ஆகஸ்ட் 12ம் தேதி, சந்திரன் நேரடியாகச் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் கடந்து சென்று வட அட்லாண்டிக் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் முழு நிழல் பாதையை உருவாக்கும்.
கிரீன்லாந்தில் முழு சூரிய கிரகணத்தை பார்க்கலாம்
சூரியன் முழுமையாக மறைக்கப்படும் இந்த அரிய காட்சியைக் கிழக்கு கிரீன்லாந்து, மேற்கு ஐஸ்லாந்து, வடக்கு ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் வடகிழக்கு மூலை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் நேரடியாகக் காணலாம்.
அமெரிக்காவில் பகுதி நேர சூரிய கிரகணம்
நாசாவின் கணிப்பின்படி, ஐரோப்பாவின் பெரும்பகுதி, வட அமெரிக்காவின் வடக்குப் பகுதி மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றில் பகுதி சூரிய கிரகணம் மட்டுமே தெரியும்.
ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் முக்கிய நிலப்பரப்பில் உள்ள மேற்குப் பகுதி மக்களுக்கு, சூரிய அஸ்தமன கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு ஏற்படும்.
இந்தியாவில் காண முடியுமா?
இந்த அரிய முழு சூரிய கிரகணத்தைக் காண்பதற்கான வாய்ப்பு இந்திய விண்வெளி ஆர்வலர்களுக்கு கிடைக்காது.
கிரகணத்தின் முழு நிழல் பாதையானது வட அட்லாண்டிக் மற்றும் ஐரோப்பியப் பகுதிகளை மட்டுமே கடந்து செல்வதால், இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது.
மேலும் இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால், அது இந்தியாவில் தெரியாது.
இரவு என்பதால் இந்தியாவில் காண முடியாது
ஆகஸ்ட் 12,ம் தேதி புதன்கிழமை, இந்திய நேரப்படி 9.45 மணி முதல் அதிகாலை 2:15 மணிக்குள் முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. 4 மணி நேரம் 12 நிமிடங்கள் சூரிய கிரகணம் நீடிக்கும்.
நேரலை செய்யும் நாசா
இருப்பினும், சர்வதேச விண்வெளி முகமைகளின் நேரடி இணையவழி ஒளிபரப்புகள் மூலம் இந்திய மக்கள் இந்த பிரம்மாண்ட விண்வெளி நிகழ்வை வீட்டில் இருந்தபடியே கண்டு மகிழலாம். முழு சூரிய கிரகணத்தை நாசா நேரலை செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிரகணத்தின் கால அளவு மற்றும் அப்போது தோன்றும் மாற்றங்கள்
முழு சூரிய கிரகணத்தின் கால அளவானது அது பார்க்கப்படும் இடத்தைப் பொறுத்து மாறுபடும் என்று நாசா தெரிவித்துள்ளது.
கிரகணத்தின் மையப் பாதையில் இருக்கும் பெரும்பாலான பகுதிகளில் சூரியன் முழுமையாக இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரமே மறைக்கப்பட்டிருக்கும்.
2.5 நிமிடங்கள் மறைக்கப்படும் சூரியன்
கிரீன்லாந்து, ரஷ்யா அல்லது வட அட்லாண்டிக்கின் மையப் பகுதியில் இருப்பவர்களுக்கு இது இன்னும் சற்று கூடுதல் நேரமாக நீடித்தாலும், அதுவும் 2.5 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருக்கும்.
முழுமையாகச் சூரியன் மறையும் அந்த சில நிமிடங்களில், சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கொரோனா பகுதி ஒரு மங்கலான ஒளியுடன் வெறும் கண்ணிற்குத் தெளிவாகத் தெரியும்.
அந்த நேரத்தில் பூமியின் வெப்பநிலை சற்றுக் குறைந்து குளிர்ந்த உணர்வு ஏற்படுவதுடன், இருண்ட வானத்தில் கிரகங்கள் மிகவும் பிரகாசமாகத் தோன்றும் அதிசயமும் நிகழும்.
வெறும் கண்களால் பார்க்க கூடாது
பகுதி சூரிய கிரகணம் நிகழும் சமயங்களில் கூட, முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றிச் சூரியனை ஒருபோதும் வெறும் கண்ணால் நேரடியாகப் பார்க்கக் கூடாது.
சூரியனின் கதிர்கள் கண்களின் விழித்திரையை உடனடியாகவும் நிரந்தரமாகவும் சேதப்படுத்தும் ஆபத்து உள்ளதால், சான்றளிக்கப்பட்ட சூரிய கிரகணக் கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கிரகணம் தொடங்குவதற்கு முன்பும், அது முடிவடைந்த பின்பும் பகுதி கிரகணக் கட்டங்களை ஆவலோடு கவனிக்கும் போது, கண்டிப்பாகப் பிரத்யேக சோலார் ஃபில்டர்கள் அல்லது கைக்கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நாசா அறிவுறுத்தி உள்ளது.
========