Netanyahu Invites PM Modi and Pilot Smit Machchhar to Israel Independence Day Celebrations Google
உலகம்

இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க மோடி, ஸ்மித் மச்சாருக்கு அழைப்பு: நெதன்யாகு அறிவிப்பு ...

174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு உயரிய கவுரவம்; சுதந்திர தின சுடரை ஏற்ற வருமாறு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு ...

NARENDRAN K

இஸ்ரேலுக்கு சென்றுகொண்டிருந்த Flydubai விமானத்தில் ஏற்பட்ட அவசரநிலையின்போது 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கேப்டன் ஸ்மித் மச்சார் ஆகியோரை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

174 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி :

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற Flydubai விமானத்தில், துணை விமானி திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த போதிலும், விமானி ஸ்மித் மச்சார் துணிச்சலுடன் செயல்பட்டு விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க உதவினார்.

பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபுக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதில் இருந்த 174 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

நெதன்யாகுவின் நேரடி பாராட்டு :

இந்த சம்பவத்திற்குப் பிறகு, கேப்டன் ஸ்மித் மச்சாருடன் காணொலி வாயிலாக பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது துணிச்சலை வெகுவாக பாராட்டினார்.

"நீங்கள் இஸ்ரேலின் ஹீரோ மட்டுமல்ல, இந்தியாவின் ஹீரோ, உலகத்தின் ஹீரோ" என்று அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பு :

அப்போது பேசிய நெதன்யாகு, இஸ்ரேலின் அடுத்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் நடைபெறும் பாரம்பரிய சுடரேற்றும் நிகழ்ச்சியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், கேப்டன் ஸ்மித் மச்சாரும் இணைந்து பங்கேற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

இது இஸ்ரேலில் வழங்கப்படும் மிக உயரிய மரியாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தியா - இஸ்ரேல் நட்புறவின் புதிய அடையாளம் :

பிரதமர் மோடி மற்றும் நெதன்யாகு இடையிலான நெருக்கமான உறவு கடந்த சில ஆண்டுகளில் இந்தியா - இஸ்ரேல் உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், ஒரு இந்திய விமானியின் வீரச் செயலை கவுரவிக்கும் விதமாக மோடியுடனும் ஸ்மித் மச்சாருடனும் இணைந்து சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது இரு நாடுகளின் நட்புறவின் புதிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

======================